பொழுதுபோக்கு

மேட்ச் தோத்தத விடுங்க.. 5 எலிமினேட்டர் ஆடியும் கோலியால் இத செய்ய முடியாம போனத கவனிச்சீங்களா..

விராட் கோலி கிரிக்கெட் போட்டிகளில் 2008 ஆம் ஆண்டு அறிமுகமாக, 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பையில் இடம் பிடித்திருந்தார். தோனி தலைமையில் ஆடி இருந்த இந்திய கிரிக்கெட் அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது.

இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் கோலியின் இன்னிங்ஸ் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளையும் பெற்றிருந்தது. அப்போது தொடங்கிய ஆட்டம் தற்போது வரையில் அவர் தொடர்ந்து கொண்டே இருந்தாலும் கோலி கேப்டனான பின்னரோ அல்லது ரோஹித் சர்மா தலைமையிலோ எந்த ஐசிசி கோப்பையும் வெல்ல முடியவில்லை. இது ஒரு புறம் இருக்க 2008 ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற ஒரே அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடிவரும் விராட் கோலி, அதிலும் எந்த கோப்பையையும் கைப்பற்றியதில்லை.

அவரது தலைமையில் ஆர்சிபி ஆடிய போதும் சில பொன்னான வாய்ப்புகளை தவற விட்டிருந்தது. தொடர்ந்து தற்போது பாப் டு பிளஸ்ஸிஸ் தலைமையிலும் அப்படியே நடந்து வரும் நிலையில் சர்வதேச கிரிக்கெட் அளவிலும் இதே நிலைமைதான் கோலிக்கு தொடர்ந்து வருகிறது. பல போட்டிகளில் மிகச் சிறந்த இன்னிங்சை வெளிப்படுத்தி தனது அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் விராட் கோலி, கடந்தாண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரராக இருந்தார்.

ஆனாலும், இறுதிப் போட்டியில் இந்திய அணி துரதிர்ஷ்டவசமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது. இதே போல தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும், 700 ரன்களை கடந்த ஒரே வீரராக கோலி இருக்க, எலிமினேட்டர் போட்டியில் தோல்வி அடைந்து ஆர்சிபி வெளியேறியது. இப்படி கோலி தன்னால் முடிந்த அளவுக்கான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் அவரது அணி எந்த கோப்பையும் வெல்லாமல் இருப்பது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் பெரிய அளவில் மனம்வருந்த வைத்து வருகிறது.

இதனிடையே தான் கோலி ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் இன்னும் எட்டாமல் இருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம். கடந்த 2015 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஆர்சிபி ஆடிய எலிமினேட்டர் போட்டியில் 12 ரன்களில் அவுட்டாகி இருந்தார் கோலி. இதேபோல 2020 ஆம் ஆண்டு எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத்திற்கு எதிராக ஆறு ரன்களும், 2021 மற்றும் 22 ஆகிய ஆண்டுகளில் முறையே கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகளுக்கு எதிராக 39 மற்றும் 25 ரன்களும் எடுத்திருந்தார் கோலி.

இப்படி நான்கு எலிமினேட்டர் போட்டிகளிலும் ஒரு முறை கூட அரை சதம் அடிக்காமல் கோலி இருந்து வந்த நிலையில் ராஜஸ்தானுக்கு எதிராக இந்த முறை நிச்சயமாக அதனை கடப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டியிலும் அவர் 33 ரன்களில் அவுட் ஆனதால் மீண்டும் ஒருமுறை எலிமினேட்டர் போட்டியில் அரைச்சதத்தை அடிக்கும் வாய்ப்பையும் அவர் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Ajith V

Recent Posts