பொழுதுபோக்கு

எந்த இந்திய பேட்ஸ்மேனும் செய்யாத மோசமான சாதனை.. கோலி மீண்டும் சொதப்ப காரணமா இருந்த ஒரே விஷயம்..

கோலிக்கு என்ன தான் ஆச்சு என தற்போது அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் புலம்ப தொடங்கி விட்டனர். கோப்பையை வெல்ல முடியாமல் போனதால் ஐபிஎல் தொடரில் கோலி அதிக விமர்சனங்களை சந்திக்க, உலக கோப்பைக்கு எங்களிடம் தான் நீங்கள் வர வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆவேசத்துடன் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

ஆனால், டி 20 உலக கோப்பை தொடர் முடியும் தருவாயில் இருக்க, இந்திய அணி வெற்றி பெற்ற ஒரு போட்டியில் கூட கோலியால் அவர்கள் வெல்லவில்லை. எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இருந்து வரும் கோலி, முதல் 3 லீக் போட்டிகளில் சேர்த்து ஐந்து ரன்கள் மட்டும் தான் எடுத்திருந்தார். 1, 4 மற்றும் 0 என அவரது ரன் இருக்க, குறைந்தது டி 20 போட்டிகளில் 30 ரன்களுக்கு மேல் சேர்க்கும் கோலிக்கு இப்படி ஒரு நிலையா என அனைவரும் புலம்பினர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை, அதே ஆண்டில் நடந்த டி 20 உலக கோப்பை, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 உலக கோப்பை, இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடர் என அனைத்திலும் கோலி அதிக ரன் குவித்து பட்டையை கிளப்ப, அதே ஃபார்மில் டி 20 உலக கோப்பைத் தொடருக்காகவும் அமெரிக்காவில் கால் பதித்தார் கிங் கோலி.

ஆனால், இங்கே எல்லாம் தலைகீழாக மாற, லீக் போட்டிகளில் மொத்தம் 5 ரன்கள் சேர்த்த கோலி சூப்பர் 8 சுற்றில் 3 போட்டிகள் ஆடி 61 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டக் அவுட்டாகி மீண்டும் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார். லீக் சுற்று மற்றும் சூப்பர் 8 போட்டிகளில் கோலி சொதப்பினாலும் அரையிறுதியில் நிச்சயம் சாதிப்பார் என எதிர்பார்த்தால் இங்கிலாந்து அணிக்கு எதிராக வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார் கோலி.

இதனால், மொத்தம் 7 போட்டிகளில் சேர்த்து 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள கோலி, எந்த இந்திய வீரரும் செய்யாத ஒரு மோசமான சாதனைக்கும் தற்போது சொந்தக்காரராகி உள்ளார். இந்த 7 போட்டிகளில் இரண்டு முறை மட்டும் இரட்டை இலக்க ரன் சேர்த்த கோலி, மீதம் 5 முறை 1, 4, 0, 0, 9 என்ற ரன்களை சேர்த்துள்ளார்.

இதன் மூலம் ஒரே டி 20 உலக கோப்பையில் ஐந்து முறை ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டான முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனையையும் படைத்துள்ளார். 3 வது வீரராக களமிறங்கி பல சிறந்த இனினிங்ஸ்களில் ஆடியுள்ள கோலி, டி 20 உலக கோப்பைத் தொடரில் அனைத்து போட்டிகளிலும் தொடக்க வீரராக களமிறங்கியது தான் அவர் ரன் சேர்க்காமல் போனதற்கு முக்கிய காரணம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Published by
Ajith V

Recent Posts