ஒருத்தன் கர்ஜனை, ஒருத்தன் கல்லணை.. விராட், ரோஹித் கூட்டாக எடுத்த எமோஷனல் முடிவு..

இந்திய கிரிக்கெட் அணி பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மிக முக்கியமான ஒரு எமோஷனல் தருணத்தை ஒட்டுமொத்தமாக கொண்டாடி தீர்த்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரையில் டாப் கிரிக்கெட் அணி என எடுத்துக் கொண்டாலே பலர் சொல்லும் பெயர் நிச்சயம் இந்தியாவாக தான் இருக்கும். 1980 களில் மிக மிக சிறிய அணியாக கிரிக்கெட் அரங்கில் வலம் வந்த இந்திய அணியை முதல் இடத்திற்கு கொண்டு சேர்த்தது 1983 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பைத் தொடர் தான்.

கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி உலக கோப்பையை சொந்தமாக்கி வரலாறு படைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்திய அணியின் 28 ஆண்டு கால உலக கோப்பை தாகத்திற்கு தோனி தலைமையிலான இளம் படை, டி20 உலக கோப்பைத் தொடரை 2007 ஆம் ஆண்டு வென்று புது சரித்திரத்தை எழுதி இருந்தது.

இதன் பின்னர், 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என 6 ஆண்டுகளில் 3 டிராபிகளை சொந்தமாக்கி இருந்தது. ஆனால், அடுத்த 11 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணி, ரோஹித், கோலி உள்ளிட்டோர் தலைமையில் யாராலும் அசைத்து பார்க்க முடியாத அணியாக இருந்த போதிலும் ஐசிசி கோப்பையை மட்டும் நெருங்க முடியாமல் போனது.

ஒரு சிலமுறை இறுதி போட்டிக்கு நுழைந்தாலும் ஏதாவது ஒரு விஷயம் எதிர்பார்த்தது போல போகாமல் இந்திய அணிக்கு காலையும் வாரி விட்டிருந்தது. ஆனால், டி20 உலக கோப்பைத் தொடரில் இந்த முறை அசுர பலத்துடன் விளங்கி இருந்தது. அத்துடன் மட்டுமில்லாமல், தென்னாப்பிரிக்காவை இறுதி போட்டியில் வீழ்த்தி 17 ஆண்டுகள் கழித்து டி20 உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ளது.

கையை விட்டு வெளியே போன போட்டியை பும்ரா, ஹர்திக் பாண்டியா என கடைசி ஐந்து ஓவர்களில் பந்து வீச்சாளர்கள் திரும்ப கொண்டு வந்து இந்திய அணியை 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தனர். இந்திய ரசிகர்களே தோல்வி தான் என சோர்ந்து போக, வீரர்கள் கொஞ்சம் கூட தளராமல் வெற்றியை சொந்தமாக்கி உள்ளனர்.

ரோஹித், கோலி என சீனியர் வீரர்களின் பங்கு பெரிதாக இருக்க, அவர்கள் இருவரும் தற்போது எடுத்துள்ள முடிவு, ரசிகர்களை சிறிதாக கண்கலங்க வைத்திருந்தது. இறுதி போட்டியில் 76 ரன்கள் சேர்த்து ஆட்ட நாயகன் விருது வென்றிருந்த கோலி, இத்துடன் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இவரை போலவே, கேப்டன் ரோஹித் ஷர்மாவும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ள சூழலில், இந்த வெற்றியுடன் ஓய்வு பெறுவது சரியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இரு ஜாம்பவான்களின் இந்த முடிவு ரசிகர்களை சோகம் அடைய வைத்தாலும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளின் ஐசிசி தொடரில் வென்று வரலாறு படைக்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Published by
Ajith V

Recent Posts