அங்கே என்ன பண்ணிட்டுருக்கே.. சிவாஜி இறுதி சடங்கில் பிரபல நடிகரை திட்டிய விஜயகாந்த்

தமிழ் சினிமாவின் சொக்கத்தங்கமாக இருந்த நடிகர் விஜயகாந்தின் மறைவு, சினிமா துறையில் இருந்த பலரை கூட அதிகம் வேதனையில் ஆழ்த்தி இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்த நடிகர் விஜயகாந்த், அரசியல் மற்றும் சினிமா என இரண்டிலும் அதிகம் ஈடுபடாமல் இருந்து வந்தார். இதனையடுத்து சமீபத்தில் உடல்நல குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

சென்னையில் அவரது உடல் வைக்கப்பட்ட இடத்தை சுற்றி லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கூடியிருந்த நிலையில், பலரும் அங்கே கண்ணீர் அஞ்சலி செலுத்தி கேப்டனுக்கு பிரியாவிடை அளித்திருந்தனர். வீடு தேடி வருபவர்களுக்கு வயிறார உணவு போட்டும், நடிகர் சங்க தலைவராக இருந்த போது தமிழ் சினிமா முன்னேறுவதற்கான வழிகளையும் உருவாக்கி இருந்த விஜயகாந்த், என்றைக்குமே தமிழ் மக்கள் மனதிலும், தமிழ் திரை பிரபலங்கள் மனதிலும் நிலைத்து நிற்கக் கூடியவர்.

அதே போல நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் இருந்த போது அவர் செய்த மிகப்பெரிய ஒரு நிகழ்வு என்றால் சிவாஜி கணேசனின் மறைவின் போது அவரது இறுதிச் சடங்கை தனியாளாக கையாண்டு நடத்தி வைத்தது தான். சினிமாவில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த நடிகர் சிவாஜியின் மரணத்தின் போது லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடி இருந்தனர். ஆனால் இவை அனைத்தையுமே தனி ஆளாக சமாளித்து மிகச் சிறப்பாக சிவாஜியின் இறுதி சடங்கு நடக்கவும் வழி செய்த விஜயகாந்தை நடிகர் சிவாஜியின் மகனும், நடிகருமான பிரபுவும் கூட ஒரு நிகழ்ச்சியில் பாராட்டி இருந்தார்.

இந்த நிலையில், சிவாஜியின் இறுதிச்சடங்கின் போது பிரபல நடிகர் ஒருவரை நடிகர் விஜயகாந்த் திட்டியது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. அந்த சமயத்தில், நடிகர் சங்கத்திற்கு வந்த அனைவரையும் காரை அங்கேயே நிறுத்திவிட்டு லாரியில் சிவாஜியின் இறுதிச் சடங்கு நடக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் விஜயகாந்த் குறிப்பிட்டார். அப்போது சிவாஜியின் உடலை எடுத்து வந்த லாரி உள்ளே செல்ல அங்கிருந்து சிவாஜியின் உடலை எடுத்து அவரின் குடும்பத்தினரிடம் கொடுக்க வேண்டும் என்று நிலை இருந்தது.

அந்த சமயத்தில் சிவாஜியின் உடலை எடுக்க அங்கே யாரும் இல்லாததால் நடிகர் தலைவாசல் விஜயை அழைத்து சிவாஜியின் உடலை தூக்கும்படியும் விஜயகாந்த் கூறி இருந்தார். தனக்கு கிடைத்த பாக்கியம் பற்றி அங்கிருந்தவர்களிடம் தலைவாசல் விஜய் பேசிக் கொண்டிருக்க, தூரத்தில் இருந்து ஒரு கோபமாக கத்தி உள்ளார் விஜயகாந்த்.

‘என்ன அங்க நின்னு பேசிட்டு இருக்கீங்க. பாடி எடுத்துட்டு வர சொன்னா என்ன அங்க கிசுகிசுன்னு’ என கோபமாக கத்தியது பற்றி தலைவாசல் விஜய் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சிவாஜியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தலைவாசல் விஜய் அருகே வந்த விஜயகாந்த், ‘கோபத்துல கத்திட்டேன் விஜய். ஒன்னும் மனசுல வச்சுக்காத’ என தான் செய்த தவறை உணர்ந்து மனம் வருந்தினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.