படம் கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகாது.. அரை மனதோட விஜயகாந்த் நடிச்சு பிளாக்பஸ்டர் ஆன திரைப்படத்தின் பின்னணி..

கேப்டன் என்ற வார்த்தைக்கு முழு உதாரணமாக வாழ்ந்து வரும் விஜயகாந்திற்கு கடந்த சில ஆண்டுகளாகவே நிலைமை சரி இல்லாமல் இருந்து வருகிறது. அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட சூழலில், தனது கட்சி தொடர்பாகவோ அல்லது திரைப்படங்கள் தொடர்பாகவோ பொது இடங்களில் எங்கேயும் தோன்றாமல் இருந்து வந்தார். கடந்த பிறந்தநாளில் விஜயகாந்த் வந்திருந்த நிலையில் அவரது உடல் நிலையை கண்ட தொண்டர்கள் கண்ணீர் வடித்திருந்த சம்பவம், அனைவரையும் மனம் நொறுங்க வைத்திருந்தது.

உடல் மெலிந்து போய், அந்த கம்பீர குரலையும் கேட்க முடியாமல், நடக்கவும் முடியாமல் சிரமப்பட்ட விஜயகாந்தின் நிலை, பலரையும் உருக்குவதாக இருந்தது. இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவரது உடல்நிலையில் பிரச்சனை உருவானதால் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டிருந்தார் விஜயகாந்த். ஆரம்பத்தில் அவரின் நிலை மோசமடைந்து வருவதாக வதந்திகள் பரவ, அவற்றில் உண்மையில்லை என்றும் விஜயகாந்த் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவரது மனைவி பிரேமலதா தெரிவித்திருந்தார்.

தற்போது வரை தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், விரைவில் குணமடைந்து பழைய தொனியுடன் பொது வெளியில், கம்பீர நடை போட வேண்டும் என ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கு மத்தியில், தனது சினிமா மற்றும் அரசியல் பயணத்தில் விஜயகாந்த் பலருக்கும் செய்த உதவி தொடர்பாக பல பிரபலங்கள் பேசி இருந்த காணொளிகள் அதிகம் இணையத்தை ஆக்கிரமித்திருந்தது.

அதே போல, விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும் மறைந்த தயாரிப்பாளருமான இப்ராஹிம் ராவூத்தர் பற்றியும் நிறைய அரிய தகவல்கள் இணையத்தில் வலம் வந்த வண்ணம் இருந்தது. பொதுவாக, நண்பர் இப்ராஹிம் குறிப்பிடும் படங்களில் தான் விஜயகாந்த் நடிக்க ஒத்துக் கொள்வார் என்றும் தகவல்கள் கூறுகின்றது. விஜயகாந்திற்கு படம் பிடிக்கவில்லை என்றாலும் இப்ராஹிம் சரி என சொன்னால் அந்த படத்தில் நடிக்க விஜயகாந்தை ஒப்புக் கொள்வாராம்.

அப்படி ஒரு முறை, விஜயகாந்திற்கு ஒரு திரைப்படத்திற்கான வாய்ப்பு வர அதில் நடிக்க வேண்டுமா என அவர் அரை மனதோடு இருந்ததாக தெரிகிறது. அந்த கதை இப்ராஹிமுடையது தான். அதனை இயக்க இயக்குனரை தேட, ஆர்.கே. செல்வமணியையும் இறுதியில் ஒப்பந்தம் செய்தனர். ஆனாலும் படத்தின் கதை விஜயகாந்திற்கு ஒரு திருப்தி இல்லாமல் தான் இருந்தது. அதன் படப்பிடிப்பின் போதும் செல்வமணி மற்றும் விஜயகாந்த் இடையே முரண்பாடுகள் உருவானதாகவும் கூறப்படுகிறது.

ஷூட்டிங்கும் இதனால் தடைபட, பின்னர் இப்ராஹிம் நடுவே புகுந்து விஜயகாந்தை சமரசம் செய்து வைத்தார். மேலும் இந்த படம் தோற்று போனாலும் அதற்கான பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாக இப்ராஹிம் தெரிவிக்கிறார். தொடர்ந்து திரைப்படமும் சிறப்பாக தயாராகி வெளியான அந்த திரைப்படம் தான் ‘புலன் விசாரணை’.

விஜயகாந்த் எந்த படத்தில் முழு சம்மதமும் இல்லாமல் நடித்தாரோ அந்த படம் விஜயகாந்தின் திரை பயணத்தில் மிக முக்கியமான படமாக மாறி இருந்தது. மேலும் புலன் விசாரணை திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது அதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews