மாணவர்களுக்கு பாராட்டு விழா.. விஜய் பேசிய அரசியல்.. புரிய வேண்டியவர்களுக்கு புரிந்திருக்கும்..!

 

தளபதி விஜய் இன்று மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசு தொகையை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நிலையில் இந்த விழாவில் அவர் பேசிய அரசியல் புரிய வேண்டியவர்களுக்கு புரிந்திருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

இன்றைய விழாவில் அவர் பேசிய போது தமிழ்நாட்டில் உலக தரத்தில் டாக்டர்கள், இன்ஜினியர்கள், வக்கீல்கள் இருக்கிறார்கள், ஆனால் நமக்கு நல்ல தலைவர்கள் இல்லை, நல்ல தலைவர்கள் என்பது அரசியலில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் நல்ல தலைவர்கள் வேண்டும், குறிப்பாக படித்தவர்கள் தலைவர்களாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நல்ல தலைவர்கள் இல்லை என்று விஜய் கூறியது நல்ல அரசியல் தலைவர்கள் இல்லை என்பதைத்தான் என்றும், குறிப்பாக படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறியதை அடுத்து தற்போது இருக்கும் அரசியல்வாதிக்கு படிப்பு இல்லை என்பதை அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டுவதாக தெரிகிறது.

மேலும் எதிர்காலத்தில் அரசியல் என்பது ஒரு வேலை வாய்ப்பாக இருக்க வேண்டும் என்றும், நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும், மாணவர்கள் தினமும் செய்தித்தாளை வாசித்து அரசியல் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  விஜய் கட்சி ஆரம்பித்ததே மாணவர்களை நம்பி தான் என்றும், தற்போது மாணவர்களாக இருப்பவர்கள் 2026 ஆம் ஆண்டு ஓட்டு போடும் வயதை எட்டி விடுவார்கள் என்பதால், இப்போதே அவர் மாணவர்களை அரசியலுக்கு மறைமுகமாக அழைப்பதாகவும் ஒரு நல்ல தலைவரை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்வதில் இருந்து, தன்னை தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் மறைமுகமாக சொல்வதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் சமூக வலைதளங்களில் நல்லதை கெட்டதாகவும் கெட்டதை நல்லதையாகவும் நல்லவர்களை கெட்டவர்களாகவும் கெட்டவர்களை நல்லவர்களாகவும் காண்பிக்கிறார்கள் என்றும் அதில் எது உண்மை, எது பொய் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று விஜய்க்கு கூறியதில் இருந்து தன்னை பற்றி சமூக வலைதளங்களில் மோசமாக பரப்பப்படும் விமர்சனங்களை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்பதை அவர் மறைமுகமாக கூறியுள்ளார்.

மேலும் தற்போது தமிழகத்தில் போதைப்பொருள் அதிகமாகிவிட்டது என்று கூறிய விஜய்,  போதைப்பொருளை தடுக்க அரசு தவறிவிட்டது என்றும் ஆனால் அதே நேரத்தில் அதை பேசுவதற்கான மேடை இதுவல்ல என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே கள்ளச்சாராய சம்பவத்திற்கு குரல் கொடுத்த விஜய், தற்போது போதைப்பொருளை தடுக்க அரசு தவறிவிட்டது என்று நேரடியாக குற்றம் காட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விஷயத்தில் அரசை மட்டும் நம்பாமல், சுய ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், போதை பொருளை தொட மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் அவர் மாணவிகள் மாணவ மாணவிகளிடம் கேட்டுக்கொண்டார்.

மொத்தத்தில் விஜய் நேரடியாக அரசியல் பேசாவிட்டாலும் மறைமுகமாக தனது முதல் அரசியல் பேச்சை பேசி உள்ளார் என்றும் அவரது பேச்சு புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Published by
Bala S

Recent Posts