உறங்குவதாய் நடிக்கும் பெண் -திருப்பாவை பாடலும், விளக்கமும் -13


d9a52388af56224ed3796c9f4c85cf1c-1

பாடல்.. 

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
 கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
 பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம்புக்கார்,
 வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று,
 புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
 குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே,
 பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
 கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.

பொருள்…

பறவை வடிவத்தில் தன்னைக் கொல்ல வந்த பகாசுரனின் வாயைக் கிழித்து கொன்றவன். பிறர்மனை நாடிய இலங்கை மன்னன் ராவணனின் பத்து தலைகளையும் கிள்ளி எறிந்தவன். இப்படிப்பட்ட ராமன் புகழைப்பாடிய வண்ணம் தோழிகள் அனைவரும் பாவை நோன்பு இருக்கும் இடத்திற்கு சென்று விட்டனர். வானில் வியாழ நட்சத்திரம் மறைந்து வெள்ளி தோன்றி விட்டது.  பறவைகள் துயில் நீங்கி எழுந்து கீச்சிட்டு ஆரவாரம் செய்கின்றன. மலரை போன்ற கண்களை உடையவளே, குளிர் நீரில் நீராடி மகிழாது படுத்துக் கிடக்கலாமோ? இந்த நல்ல நாளில் உன் கபட நாடகத்தை கலைத்து விட்டு நீராட வருவாயாக.

விளக்கம்..

தன்னை கொல்ல பறவை, விலங்குகள் வடிவில் வந்த அசுரர்களையெல்லாம் அழித்தவனும், ராமாயாணத்தில் சீதையை கவர்ந்து சென்ற கொடியவனான ராவணனை வதம் செய்த விஷ்ணு பகவானின் புகழ்பாடி பெண்களெல்லாம் நீராடி பாவை நோன்பு நோற்று கோவிலுக்கும் சென்றாகிவிட்டது. வானில் விடிவெள்ளி மறைஞ்சு சூரியனும் உதயமாகிவிட்டது. இன்னமும் உறக்கம் தெளியாததுபோல் நாடகமாடி தூங்கும் பெண்ணை கிண்டல் செய்வதாய் அமைந்தது இப்பாடல்..

திருப்பாவை பாடலும், விளக்கமும்…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews