உங்கள் பட்டுப்புடவை என்றும் புதிது போல இருக்கனுமா? அப்போ இந்த 11 டிப்ஸ்களை பின்பற்றுங்கள்…!

பட்டுப்புடவை எடுக்கச் செல்லும் பெண்கள் எத்தனை மணிநேரம் ஆனாலும் சரி தங்கள் மனதிற்கு பிடித்தமான புடவை கிடைக்கும் வரை அந்த கடைக்காரரையும் உடன் வந்தவரையும் படாத பாடு படுத்தி விடுவர் என்று வேடிக்கையாக கூறுவது உண்டு.

காரணம் அதிக விலை கொடுத்து வாங்கும் அந்த பட்டுப்புடவையானது தரம் உள்ளதாகவும் தனக்கு பிடித்தமானதாகவும் இருக்க வேண்டும் என்று பெண்கள் நினைப்பதுதான்.

இப்படி பார்த்து பார்த்து பட்டுப்புடவையை வாங்கினால் மட்டும் போதாது அதனை சரியாக பராமரிக்கவும் வேண்டும். ஒழுங்காக பராமரித்தால் தான் பட்டுப்புடவை அதன் பளபளப்பு குறையாமல் சரிகைகள் ஏதும் விடாமல் நீண்ட நாட்களுக்கு மட்டுமல்ல வருட கணக்கில் கூட அப்படியே இருக்கும்.

பலர் இது எங்கள் பாட்டி காலத்து புடவை என்று பத்திரமாக வைத்திருப்பதை கூட நாம் காணலாம் ‌‌.

புடவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்… பட்டு புடவைகளின் வகைகள் பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க

பட்டுப்புடவையை பராமரிப்பது மிகவும் கடினமா? என்று கேட்டால் இல்லை. பட்டுப்புடவையை பராமரிக்க சில எளிய முறைகளை அவ்வபோது பின்பற்றினால் மட்டும் போதும்.

arani 1

பட்டுப்புடவையை பராமரிக்க என்னென்ன செய்ய வேண்டும்:
  1. பட்டுப்புடவை வாங்கிய பெட்டியிலேயே வைத்து விடக்கூடாது. உபயோகித்து மீண்டும் அதே பெட்டியில் மடித்து வைக்கவும் கூடாது பட்டுப்புடவையை பெட்டியில் வைப்பதை விட ஒரு நல்ல பருத்தி துணியில் போட்டு மடித்து வைத்திருந்தால் பத்திரமாக இருக்கும்.
  2. இரும்பு பெட்டிகளில் வைப்பதை விட மரப்பெட்டியில் வைக்கும் பொழுது பட்டுப்புடவையானது புதிது போன்று இருக்கும்.
  3. இது பலர் அறிந்ததே பட்டுப்புடவையை சோப்பு, சோப்பு பவுடர் போட்டு துவைப்பது அடித்துப் பிழிந்து துவைப்பதோ கூடாது. பட்டுப்புடவை அணிந்து சென்று வீடு வந்ததும் சிறிது நேரம் காற்றாட உலர விட்டு பின் தேய்த்து மடித்து வைத்து விடவும்.
  4. துவைக்க வேண்டும் என்றால் தண்ணீரில் ஷாம்பு அல்லது மெல்லிய சோப்பு நீர் சேர்த்து சிறிது நேரம் நனைத்து அலசி உலர விடவும். (சரிகை தனியாகவும் உடல் தனியாகவும் சோப்பு நீரில் நனைக்கவும்.)
  5. ஒருவேளை ஏதேனும் கறை பட்டு விட்டால் எங்கு கறை உள்ளதோ அந்த இடத்தை மட்டும் குளிர்ந்த நீரில் ஒற்றி எடுத்து சிறிது நேரம் உலர விடலாம்.
  6. பட்டுப்புடவை ஒரே மடிப்பில் இல்லாமல் நேரம் கிடைக்கும் பொழுது அவ்வப்போது அதன் மடிப்பை மாற்றி வேறு திசையில் மடித்து வைக்கவும் இதனால் அதிலுள்ள சரிகைகள் சேதம் அடையாமல் இருக்கும்.
  7. அதேபோல் சரிகை எப்பொழுதும் பட்டுப்புடவையின் உள்பக்கம் வரும்படி மடிக்கவும்.
  8. எப்பொழுதும் பட்டுப்புடவையை மற்ற புடவைகளுடன் மடித்து வைக்கக் கூடாது ஜிமிக்கி வேலைகள், கல் வைத்த புடவைகளுடன் வைக்கும் பொழுது சரிகை சேதமடைய வாய்ப்பு உண்டு.
  9. பட்டுப்புடவையை ஒருபோதும் நேரடியாக சூரிய ஒளியில் போடக்கூடாது.
  10. பட்டுப்புடவைகளை துவைக்கக் கூடாது என்பதற்காக அதை நீண்ட காலத்திற்கு தண்ணீரில் நனைக்காமலே வைத்திருக்கவும் கூடாது குளிர்ந்த நீரில் சிறிதளவு உப்பினை சேர்த்து பட்டுப்புடவை நனைத்து நிழலில் உலர்த்தலாம்.
  11. அதிக அளவு சூடு உடைய இஸ்திரி பெட்டியில் பட்டுப்புடவைகளை ஒருபோதும் தேய்க்க கூடாது. பட்டின் சரிகை மீது ஒரு துணி வைத்து அதன் மீது மட்டுமே நாம் தேய்க்க வேண்டும்.
புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews