‘காடுவெட்டி’ படத்தின் இசை வெளியீட்டு விழா… ஆர். கே. சுரேஷ் வேதனை…

தயாரிப்பாளரும் நடிகருமான ஆர். கே. சுரேஷின் நடிப்பில்,மஞ்சள் ஸ்கிரீன்ஸ் தயாரிப்பில், சோலை ஆறுமுகம் இயக்கியுள்ள ‘காடுவெட்டி’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நடைபெற்றது.

பா.ம .க கட்சியின் முக்கிய பிரமுகரான காடுவெட்டியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, மோகன். ஜி, சோலை ஆறுமுகம், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் பலர் கலந்து கொண்டனர். விரைவில் இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆர். கே. சுரேஷ், ‘கடந்த ஒன்றரை வருடங்கள் என்னை பற்றி பல கட்டு கதைகள் பரவி வந்தன. அதில் பல விஷயங்கள் என் மனதை புண்படுத்தி விட்டது. அதனால் தான் நான் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. நான் 15 வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும், நடிகராகவும் இருந்து கொண்டிருக்கிறேன். எல்லாரோடும் அண்ணன் தம்பி போல தான் பழகி வருகிறேன். நான் எப்படி ஆருத்திரா கோல்ட் மோசடியில் ஈடுப்பட்டு இருப்பேன். ஆனாலும் இந்த கஷ்டத்தை அனுபவமாக எடுத்துக் கொண்டு சட்டபூர்வமாக சென்றேன். சட்டம் எனக்கு நல்ல தீர்ப்பை கொடுத்தது. ‘காடுவெட்டி’ படம் நிச்சயமாக வெற்றிப்படமாக இருக்கும். கடவுளுக்கும் எனக்காக காத்திருந்த ரசிகர்களுக்கும் நன்றி’ என்று கூறினார்.

இயக்குனர் மோகன் .ஜி பேசுகையில், தமிழகத்தில் தவறான காதலை எதிர்த்தவர் காடுவெட்டி குரு தான். அவரை மையமாக வைத்து தான் இப்படம் இருக்கும். பல பிரச்சனைகளை தாண்டி இப்படம் வெளியாக உள்ளது. கண்டிப்பாக ‘காடுவெட்டி’ சூப்பர்ஹிட் ஆகும். குறிப்பாக இளைஞர்கள் இப்படத்தை கொண்டாடுவார்கள் என்று கூறினார்.

அடுத்ததாக பேசிய இயக்குனர் பேரரசு, தமிழ் சினிமாவில் பல காதல் படங்கள் வந்திருக்கிறது. ஆனால் இது காதல் விழிப்புணர்வு படம். பெற்றோர்கள் முக்கியமாக பார்க்க வேண்டிய படம். இதுவரை வில்லனாக நடித்து இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆகும் ஆர். கே. சுரேஷிற்கு வாழ்த்துக்கள் என்று கூறினார்.

மேடையில் பேசிய இப்படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ‘காடுவெட்டி’ ஒரு கருத்துள்ள படம். படக்குழுவினர் அனைவர்க்கும் என்னுடைய வாழ்த்துக்கள். மக்கள் அனைவரும் படத்தை திரையில் பார்த்து ரசிக்குமாறு கேட்டு கொள்கிறேன் என்று கூறினார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...