பொழுதுபோக்கு

இதுக்கு முன்னாடி ஒரு தடவ கூட இப்டி நடந்ததே இல்லையா.. டி20 வேர்ல்டு கப் ஃபைனலின் மிரட்டல் பின்னணி..

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் டி20 உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ள நிலையில் முதல் முறையாக இந்த தொடர் வரலாற்றிலேயே நடந்த சம்பவம் பல கிரிக்கெட் ரசிகர்களையும் ஒரு நிமிடம் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. முதல் டி20 உலக கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டிருந்த நிலையில் தோனி தலைமையிலான இந்திய படை அபார வெற்றியை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல அணிகள் டி20 உலக கோப்பையை வென்றுள்ள நிலையில், இந்திய அணி 2014 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதிலும் அவர்களால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.

இதனால் தற்போது மீண்டும் ஒருமுறை அற்புதமான வாய்ப்பும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு டி20 உலக கோப்பையை வெல்ல கிடைத்துள்ளது. நிச்சயம் அவர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாபிரிக்க அணிக்கு நெருக்கடி கொடுத்து கோப்பையை கைப்பற்ற முயற்சி செய்வார்கள்.

ஆனால் அதே வேளையில் இதுவரை ஒரு முறை கூட இந்த தொடரில் தோல்வியை சந்திக்காமல் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ள தென்னாபிரிக்க அணியையும் அத்தனை எளிதில் நாம் கடந்து விட முடியாது. ரபாடா, நோர்ஜே என வேகப்பந்து வீச்சு பலமாக இருக்க, ஷம்சி மற்றும் மகாராஜா என சுழற்பந்து வீச்சிலும் அற்புதமாக பந்து வீசி வருகின்றனர்.

பேட்டிங்கிலும் டி காக், ஹென்ரிச் கிளாசன், மார்க்ரம், ஸ்டப்ஸ் உள்ளிட்ட பலரும் நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்திய அணிக்கு அவர்களும் குடைச்சலை கொடுக்க தவற மாட்டார்கள். இதனால் இரு அணிகளும் இந்த சீசனில் பலம் வாய்ந்து இருப்பதால் நிச்சயம் ஒவ்வொரு பந்தும் விறுவிறுப்பாக செல்லும் என்றே தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் முதல் முறையாக டி20 உலக கோப்பையில் நடைபெறவிருக்கும் ஒரு சம்பவத்தை பற்றி தற்போது பார்க்கலாம்.

லீக் சுற்றில் பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட அணிகளை தோற்கடித்து சூப்பர் 8 சுற்றில் நுழைந்திருந்தது இந்திய அணி. அங்கேயும் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகளை வீழ்த்தியிருந்த இந்தியா, இங்கிலாந்து அணியை அரையிறுதியில் வீழ்த்தி தற்போது இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

இன்னொரு பக்கம் லீக் போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவித்திருந்த தென்னாப்பிரிக்க அணி, சூப்பர் 8 சுற்றிலும் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை தோற்கடித்து அரையிறுதிக்கு நுழைந்ததுடன் அவர்களை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தானை தூசி போல ஊதி தள்ளி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

இப்படி இரண்டு அணிகளுமே ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ள சம்பவம் டி 20 உலக கோப்பை வரலாற்றில் தற்போது முதல் முறையாக நடந்துள்ளது. இதற்கு முன்பாக உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஒரே ஒருமுறை மட்டும்தான் இப்படி நடந்துள்ளது. கடந்த 1979 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையின் இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து என இரு அணிகளும் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Published by
Ajith V

Recent Posts