ரஜினி சீனை படத்துல இருந்து தூக்கிடலாம்… இயக்குனர் எடுத்த முடிவு.. சிவாஜி போட்ட அதிரடி ஆர்டர்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி இருந்த ‘ஜெயிலர்’ திரைப்படம், பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து த. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவின் ராஜாவாக தடம் பதித்து வரும் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், கமல்ஹாசன் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஆரம்ப காலகட்டத்தில் இணைந்து நடித்துள்ளார். அப்படி இருக்கையில், சிவாஜி கணேசனுடன் ரஜினிகாந்த் இணைந்து நடித்த ‘நான் வாழ வைப்பேன்’ என்ற திரைப்படத்தின் போது நடந்த சம்பவம் ஒன்று தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

பிரபல இயக்குனரான யோகானந்த், நடிகர் சிவாஜி கணேசனை வைத்து பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார். காவேரி, வளர்பிறை, கிரஹப்பிரவேசம், ஜஸ்டிஸ் கோபிநாத் என சிவாஜி – யோகானந்த் கூட்டணியில் பல வெற்றி படங்கள் உருவாகி உள்ளது. அப்படி அவர்கள் கூட்டணியில் வெளியான மற்றொரு திரைப்படம் தான் ‘நான் வாழ வைப்பேன்’. இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கே.ஆர். விஜயா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஹிந்தியில் வெளியான ‘மஜ்பூர்’ என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் இது.

மேலும் இதற்கு முன்பு யோகானந்த் இயக்கி சிவாஜி கணேசன் நடித்திருந்த ஜஸ்டிஸ் கோபிநாத் என்ற திரைப்படத்திலும் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, நான் வாழவைப்பேன் படத்திலும் ரஜினியை நடிக்க வைக்க சிவாஜி கணேசன் யோகானந்திடம் சிபாரிசு செய்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றது. நான் வாழ வைப்பேன் என்ற திரைப்படம் பெரிய ஹிட்டாகவும் அமைந்திருந்த சூழலில், இளையராஜா இசையில் உருவான பாடல்களும் பலரின் ஃபேவரைட்டாகவும் அமைந்திருந்தது.

நான் வாழ வைப்பேன் என்ற திரைப்பட பணிகள் முடிந்த பின், சிவாஜி கணேசன், யோகானந்த் உள்ளிட்ட பலரும் அமர்ந்து திரைப்படத்தை பார்த்துள்ளனர். அப்போது படத்தின் இறுதிக் காட்சியில் ரஜினிகாந்த் சுற்றி காட்சிகள் வருவதுடன் மட்டுமில்லாமல், படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்கள் சிவாஜி கணேசனை விட ரஜினியை அதிகம் பாராட்டுவார்கள் என தோன்றி உள்ளது.

சிவாஜி கணேசன் அதை நினைத்து பெருமைப்பட, இயக்குனர் யோகானந்த் மற்றும் படக்குழுவினர் ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை எடிட்டிங்கில் குறைத்து கொள்ளலாமா என சிவாஜியிடம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றது. ஆனால், அந்த காட்சிகளை குறைக்க வேண்டாம் என்றும், வளர்ந்து வரும் ரஜினியும் அதிகம் புகழ் பெறட்டும் என பெருந்தன்மையுடன் சிவாஜி கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தொடர்ந்து நான் வாழ வைப்பேன் என்ற திரைப்படம் வெளியாகி, ஹிட்டானதுடன் ரஜினிகாந்தின் மைக்கேல் கதாபாத்திரம் கூட அதிக பாராட்டுக்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews