சதீஷ் ஹீரோவாக ஜொலித்தாரா?.. கான்ஜுரிங் கண்ணப்பன் விமர்சனம் இதோ!..

கான்ஜுரிங் கண்ணப்பன் விமர்சனம்

Conjuring Kannappan: செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா, நாசர், சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், ஆனந்த்ராஜ், எல்லி ஆவ்ராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் டிசம்பர் 8ம் தேதி வெளியான திரைப்படம் கான்ஜுரிங் கண்ணப்பன்.

கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை சிரிக்க வைத்தது. சந்தானத்துக்கு இந்த ஆண்டு வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படம் கைகொடுத்ததை போல சதீஷுக்கு கான்ஜூரிங் கண்ணப்பன் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கதை நல்லா இருந்த அளவுக்கு திரைக்கதையை இயக்குனர் சிறப்பாக வடிவமைக்காமல் விட்டது படத்தை பார்த்த ரசிகர்களுக்கு தலைவலியைத்தான் கொடுக்கிறது.

புயல் மழை வெள்ளத்தில் இருந்து தப்பித்த மக்கள் இந்த வாரம் குடும்பத்துடன் சென்று சிரித்து மகிழலாம் என தியேட்டருக்கு சென்றால் அங்கே ரெண்டு பேய் சிரிப்புக் காட்டாமல் கடுப்பு வரமாதிரி காமெடி பண்ணிக் கொண்டிருந்தால் எப்படி இருக்குமோ அதே போலத்தான் மொத்த படமும் இருக்கும்.

கேமராக மாற வேண்டும் என்கிற முயற்சியில் போராடிக் கொண்டிருக்கும் சதீஷ் ட்ரீம் கேட்சர் என ஒரு சூனியம் செய்யப்பட்ட பொருளை கையில் எடுத்து அதில் உள்ள இறகை தெரியாமல் பிய்த்து விடுகிறார்.

கடுப்பேற்றும் காமெடி:

இதன் காரணமாக அவர் தூங்கிய பின்னர் பேய் பங்களாவில் போய் சிக்கிக் கொள்கிறார். இதெல்லாம் தனது கனவில் தான் நடக்கிறது என்பது தாமதமாக அவருக்கு புரிய வருகிறது. அது குறித்து டாக்டர் ரெடிங் கிங்ஸ்லியிடம் சொல்ல அவர் ஒரு இறகை பிய்த்து அவரும் அந்த பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார். இப்படி வரிசையாக சதீஷின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் கனவில் வரும் பேய் பங்களாவில் மாட்டிக் கொள்கின்றனர்.

ஒரு கட்டத்தில் தூங்க விடாமல் குடும்பத்தினரை தடுத்து வரும் சதீஷ் இந்த பிரச்சனையை எப்படி சரி செய்தார். பேயோட்டியாக வரும் ரெஜினா கசாண்ட்ரா என்ன செய்தார். பிளாஷ்பேக் காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்ததா? என பல கேள்விகளுக்கு படத்தை பார்த்து பதில் தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஹீரோவாக ஸ்கோர் செய்ய சதீஷ் என்னதான் முயற்சித்தாலும், இன்னமும் அவருக்கு உரிய கதை கிடைக்கவில்லை என்று தான் தெரிகிறது. காமெடி படமாகவும் இல்லாமல் பேய் படமாகவும் இல்லாமல் பார்ப்பவர்களை தலைவலி வர வைக்கும் விதமாக டார்ச்சர் செய்து அனுப்புகிறது இந்த கான்ஜுரிங் கண்ணப்பன்.

கான்ஜுரிங் கண்ணப்பன் – இப்பவே கண்ணை கட்டுதே!

ரேட்டிங்: 2/5.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.