விஜயகாந்த்கிட்ட இருக்குற அந்த ஒரு குணம்.. வேற எந்த நடிகருக்கும் அப்படி ஒரு மனசு வராது.. மெய்சிலிர்த்த சரத்குமார்..

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் புதிதாக உருவாகி கொண்டே இருக்கலாம். ஆனால் சில நடிகர்கள் உண்டு பண்ணும் தாக்கங்கள், பல நூறு ஆண்டுகள் கடந்தாலும் நிலைத்து நிற்கும் வகையில் இருக்கும். அந்த வகையில், தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் பெயரை சொல்லலாம்.

அதில் மிக முக்கியமான ஒரு பெயர் தான் கேப்டன் விஜயகாந்த். ரஜினி, கமல் உள்ளிட்டோர் அதிகம் ஹிட்டுகள் கொடுத்த சமயத்தில் தனக்கென ஒரு இடத்தையும் உருவாக்கிக் கொண்டவர் விஜயகாந்த். இவரது படங்களுக்கும் அதிகம் ரசிகர்கள் குவிய, ஃபேமிலி மற்றும் ஆக்ஷன் எண்டெர்டெயினர் என மாறி மாறி விருந்து படைத்தார். சினிமாவில் தான் சாதித்ததை விட நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக தான் இருந்தார் விஜயகாந்த்.

அவரை பற்றி சினிமா பிரபலங்களிடமும், திரைப்படத்தில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களிடமும் என யாரிடம் கேட்டாலும் ஒருவர் கூட விஜயகாந்தை பற்றி தவறான கருத்துக்களை கூறி விடமாட்டார்கள். சில பேர் விஜயகாந்தை பற்றி பேசினாலே கண்ணீர் வரும் அளவுக்கு பலரும் போற்றும் வகையில் ஒரு கருப்பு எம்ஜிஆராக தான் இருந்தார்.

அரசியலில் இணைந்து அங்கேயும் தனது முத்திரையை பதித்த விஜயகாந்த், 2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளப்பெருக்கில் களத்தில் இறங்கி உதவிகளை செய்து வந்தார். ஆனால், காலத்தின் கட்டாயமோ இல்லை யார் கண் பட்டதோ தெரியவில்லை, அப்படி ஒரு கம்பீரத்துடன் நடந்த விஜயகாந்தை கடந்த சில ஆண்டுகளாகவே பார்க்க முடியாமல் போய் விட்டது.

இதற்கு மிக முக்கிய காரணம் அவரது உடல்நிலை தான். தொடர்ந்து விஜயகாந்தின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட, தற்போது அதிகம் பேசக் கூட முடியாமல் ஒதுங்கி விட்டார். பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு விஜயகாந்தின் உடல்நிலை பற்றிய தகவல், சோகத்தை வரவைக்கக்கூடிய வகையில் தான் உள்ளது.

இதனிடையே, விஜயகாந்த் செய்த ஒரு சிறந்த செயல் குறித்து முன்னணி நடிகர் சரத்குமார் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “அந்த காலகட்டத்தில் விஜயகாந்திற்கு ஏதாவது கதை வந்தால் அவருக்கு சரியாக படவில்லை என்றால் என்னை அழைத்து, ‘நீங்கள் இந்த கதையில் நடித்தால் செட்டாகும். எனக்கு இது செட்டாகும் என தோன்றவில்லை’ என கூறுவார். இந்த காலத்தில் அப்படி யாராவது கூறுவார்களா என கேட்டால் நிச்சயம் இல்லை. ஆனால் விஜயகாந்த் அப்படி கிடையாது. தனக்கு சரியாகப்படவில்லை என்றால் வேறு நடிகரிடம் அது பற்றி சொல்வார்” என நெகிழ்ந்து போய் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சரத்குமாரை போலவே, சத்யராஜூம் விஜயகாந்தின் இந்த குணம் குறித்து தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.