பொழுதுபோக்கு

ஆடாம ஜெயிச்சோமடா.. கிரவுண்ட்ல கால் வைக்காம வேர்ல்டு கப் வாங்க காரணமா இருந்த சாம்சன்.. சுவாரஸ்ய பின்னணி..

டி20 உலக கோப்பை தொடரில் கேரள வீரரான சஞ்சு சாம்சன் இடம்பெற்றிருந்த போதிலும் அவர் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. இந்தியா ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் உலக கோப்பையை வென்றிருந்தாலும் சஞ்சு சாம்சனுக்கான வாய்ப்பு கிடைக்காத காரணம் ஏன் என்றும் ரசிகர்கள் அதே வேளையில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் இந்திய அணி டி20 உலக கோப்பை கைப்பற்றியதற்கு சஞ்சு சாம்சன் தான் காரணம் என புதிய கனெக்சன் ஒன்றை ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய அணியின் சிறந்த மிடில் ஆடர் வீரராக இருந்து வருபவர் தான் சஞ்சு சாம்சன். இதற்கு முன்பே பல உலக கோப்பை தொடரில் ஆடக்கூடிய தகுதி இருந்தவராக சஞ்சு சாம்சன் இருந்தபோதிலும் சில காரணங்களால் அவருக்கான அங்கீகாரம் சரியாக கிடைக்கவில்லை.

அப்படி ஒரு சூழலில் இந்த முறை ராஜஸ்தான் அணியை ஐபிஎல் தொடரில் சிறப்பாக வழிநடத்தி இருந்த சஞ்சு சாம்சன் பேட்டிங்கிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். இதன் பின்னரும் அவர் வெளியேற்றப்பட்டால் அதற்கு பிசிசிசி தான் முழு பொறுப்பு என்றும் ரசிகர்கள் விமர்சித்து வந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கான இடமும் டி20 உலக கோப்பையில் கிடைத்திருந்தது.

ஆனால் அதே வேளையில் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் இடம்பெற்றிருந்ததால் சஞ்சு சாம்சன் எப்படி இடம் பெறுவார் என்ற கேள்வியும் இருந்து வந்தது. பந்த் சிறப்பாக செயல்படாமல் போன போதிலும் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாமல் இருந்த ரோஹித் ஷர்மா, இறுதிப்போட்டி வரைக்கும் அதையே தொடர்ந்து இருந்தார்.

இதனால் டி20 உலக கோப்பை போட்டி ஒன்றில் ஆடும் பாக்கியம் சஞ்சு சாம்சனுக்கு கிடைக்காமலே போய்விட்டது. ஆனாலும் இந்திய அணி உலக கோப்பையை பெற்றுக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக தான் இருந்து வந்தார். இதனிடையே இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்ற போதெல்லாம் அதில் ஒரு கேரள வீரர் இடம் பெற்றிருந்ததை தான் தற்போது ரசிகர்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

கபில்தேவ் தலைமையில் இந்திய அணி 1983 ஆம் ஆண்டு உலக கோப்பை வென்றபோது கேரள வீரர் சுனில் வல்சன் இடம்பிடித்திருந்தார். இதேபோல 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை என இரண்டையும் இந்திய அணி வென்றபோதும் கேரள வீரரான ஸ்ரீசாந்த் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம் பெற்றிருக்க, டி20 உலக கோப்பையையும் அவர்கள் வென்றுள்ளனர். இந்த நான்கு உலக கோப்பையை தவிர இந்திய அணி இத்தனை ஆண்டுகளில் ஆடிய மற்ற எந்த ஐசிசி உலக கோப்பைத் தொடரிலும் ஒரு மலையாளி வீரர் கூட இடம் பிடித்ததில்லை என்பது தான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.

இதனால் இனிவரும் டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் அல்லது வேறு மலையாளி வீரரை சேர்த்தால் நிச்சயம் இந்திய அணி உலக கோப்பையை தட்டி தூக்கும் என்றும் வேடிக்கையாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Published by
Ajith V

Recent Posts