பொழுதுபோக்கு

ஆஸ்திரேலியாவ ஃபைனல்ஸ்ல தோக்கடிச்சா கூட இவ்ளோ சந்தோஷம் இருக்காது.. சவுத் ஆப்பிரிக்க தோல்வியை ரோஹித் கொண்டாட காரணம்..

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் டி20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் மோதி ஒரு சில தினங்கள் ஆனாலும் இன்னும் அதைப் பற்றிய பேச்சு தான் சமூக வலைத்தளங்களில் எதை திறந்தாலும் அதிகமாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு 13 ஆண்டுகள் கழித்து இந்திய அணி ஒரு உலகக் கோப்பை வென்றதை மிகப் பெருமிதமாக ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வரும் நிலையில் இன்னும் அடுத்த சில தினங்களில் இந்த வைபும், உற்சாகமும் இருக்கும் என்று தான் தெரிகிறது.

அப்படி ஒரு சூழலில் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து வரும் தொடர்களில் தயாராகி வரும் அதே வேளையில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து அடுத்தடுத்து தங்களின் ஓய்வினையும் அறிவித்திருந்தனர். இந்த மூன்று பேரும் அனைத்து டி20 போட்டிகளிலும் ஆடி வந்ததால் இனி டி20 போட்டி இந்திய அணியில் எப்படியான வீரர்கள் களமிறங்கப்படுவார்கள் என்பது பற்றியும் அதில் நிகழப்போகும் மாற்றங்கள் என்ன என்பதை பற்றியும் ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதால் அதில் மிக உச்சமாக சந்தோஷம் அடைந்த இரண்டு பேர் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர். அதிலும் ரோஹித் சர்மா கேப்டனாக இந்த இடத்தை எட்டிப் பிடித்ததால் மைதானத்தில் இருந்த மண்ணை சாப்பிட்டும் அதில் சில நேரம் படுத்து உறங்கியும் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனிடையே தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தனது முதல் ஐசிசி கோப்பையை ஒரு கேப்டனாக ரோஹித் ஷர்மா வென்றிருந்த நிலையில் இதற்கு முன்பாக பல விஷயங்கள் அவருக்கும் சவுத் ஆப்பிரிக்காவிற்கும் தொடர்பு இருந்ததை குறித்து தற்போது பார்க்கலாம்.

சவுத் ஆப்பிரிக்கா எதிராக தனது முதல் சர்வதேச ரன்னை அடித்திருந்தார் ரோஹித் ஷர்மா. அது மட்டுமில்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சிக்ஸ், முதல் அரைச்சதம், முதல் ஆட்டநாயகன் விருது, முதல் பந்து எதிர்கொண்டது, முதல் டி20 சர்வதேச சதம், முதல் முறை ஒரு நாள் போட்டியில் தொடக்க வீரராக இறங்கியது, முதல் முறை டெஸ்டில் தொடக்க வீரராக இறங்கியது என ரோஹித்திற்கு நடந்த பல முதல் விஷயங்களுக்கும் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தான்.

இதே போல ரோஹித் ஷர்மா முதல் ஐபிஎல் டிராபியை வென்றதும் தென் ஆப்பிரிக்கா மண்ணில் தான். மேலும் இங்கு தான் தனது முதல் ஐபிஎல் ஆட்ட நாயகன் விருதையும் வென்றிருந்தார். அத்துட்ன் ஒரு வீரராக 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற போது ரோஹித் ஷர்மா அந்த அணியில் இடம்பெற்றிருந்தார். இந்த தொடரும் தென்னாப்பிரிக்காவில் தான் நிகழ்ந்திருந்தது.

இதனால், தென்னாபிரிக்க மண்ணில் முதல் டி20 கோப்பையை ஒரு வீரனாக வென்ற ரோஹித், தற்போது ஒரு கேப்டனாக தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தனது முதல் ஐசிசி உலக கோப்பையை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Published by
Ajith V

Recent Posts