ராமர் கோவில் செல்லும் சாலையில் திடீர் பள்ளம்.. 6 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த உபி அரசு..!

ராமர் கோயிலுக்கு செல்லும் சாலை சமீபத்தில் புத்தம் புதியதாக போடப்பட்ட நிலையில் அந்த சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து 6 அதிகாரிகளை உத்தர பிரதேச அரசு சஸ்பெண்ட் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட நிலையில் இந்த ராமர் கோவிலிலும், கோவில் அருகிலும் கடந்த சில நாட்களாக விரும்பத்தகாத செயல்கள் நடைபெற்று வருகிறது.

முதலில் ராமர் கோவிலில் உள்ள சன்னிதியில் மேற்கூரை ஒழுகுவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் சமீபத்தில் ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் திடீரென காலமானார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அயோத்தி ரயில் நிலையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.

இந்த நிலையில் ராமர் கோவில் செல்லும் சாலையில் திடீர் என இரண்டு அடி பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் இதை அடுத்து உத்தரப்பிரதேச அரசு அந்த சாலை அமைக்க காரணமாக இருந்த ஆறு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இந்த சாலை புதிதாக அமைக்கப்பட்டது என்றும் நேற்று மற்றும் நேற்று முன்தினம் பெய்த கன மழையில் திடீரென அந்த சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த சாலையின் தரம் குறைவாக அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக கூறப்படும் நிலையில் அயோத்தியில் இதுபோன்று நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்கள் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Bala S

Recent Posts