எல்லாத்தையும் மறந்துட்டு பேசுறீங்களா.. யுவன் ஷங்கர் ராஜாவால் வந்த பிரச்சனை.. செம கடுப்பில் ஆர் கே சுரேஷ்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருபவர் தான் ஆர் கே சுரேஷ். மருது, தாரை தப்பட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் மிகவும் கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ள ஆர் கே சுரேஷ், பில்லா பாண்டி, விசித்திரன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் முன்னணி நடிகராகவும் நடித்துள்ளார்.

நடிப்பு என்பதை தாண்டி, தர்மதுரை உள்ளிட்ட பல சிறந்த படைப்புகளின் தயாரிப்பாளராகவும் உள்ள ஆர். கே. சுரேஷ், அடுத்ததாக காடுவெட்டி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடந்திருந்த நிலையில், அதில் ஆர். கே. சுரேஷ் பேசியிருந்த விஷயங்கள் அதிகம் வைரலாகி இருந்தது.

அப்படி ஒரு சூழலில் தான், அடுத்து நடிக்க உள்ள திரைப்படத்தைப் பற்றிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்திலும் ஆர் கே சுரேஷ் பகிர்ந்து இருந்தார். ‘தென் மாவட்டம்’ என தலைப்பிட்டுள்ள இந்த திரைப்படத்தை ஆர் கே சுரேஷ் இயக்க உள்ளதும் போஸ்டர் மூலம் தெரிய வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் ஆர்கே சுரேஷின் பதிவை பகிர்ந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, “ஊடகம் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என குறிப்பிட்டு, “இந்த படத்தில் நான் பணியாற்றுவதற்காக என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படத்திற்கு தான் கமிட்டாகவில்லை என்றும் யுவன் சங்கர் ராஜா விளக்கம் கொடுக்க, இதனை பகிர்ந்த ஆர்கே சுரேஷ், “நீங்கள் இந்த படத்திற்கும் கான்செர்ட் ஒன்றிற்கும் சேர்த்து கையெழுத்து போட்டீர்கள். சந்தேகம் இருந்தால் ஒப்பந்தத்தை பரிசோதிக்கவும்” என குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமில்லாமல், “மாமனிதன் படத்தின் வெளியீட்டு நேரத்தில் உங்களுக்கு பண உதவி செய்து உற்ற நண்பனாக இருந்து ஒரே நாளில் பிரச்சனையை முடித்தோம். ஒப்பந்தத்தை சரியாக பாருங்கள் தோழரே நன்றி தென் மாவட்டத்தில் சந்திப்போம்” என யுவன் ஷங்கர் ராஜாவை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பக்கம் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு ஒப்பந்தமாகவில்லை என தெரிவித்து வரும் நிலையில் ஆனால் அவர் கையெழுத்து போட்டது உண்மை என ஆர்கே சுரேஷ் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருவதால் ரசிகர்களோ இதில் உண்மை எது என அறிய முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்து போய் உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.