இரண்டரை மணி நேர சந்திப்பு.. ஏ. ஆர். ரஹ்மானை நேரில் பார்த்தும் போட்டோ எடுக்காத ஆர் ஜே பாலாஜி.. மெய்சிலிர்க்க வைத்த காரணம்..

ரேடியோ துறையில் ஆர்ஜேவாக இருந்து பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர் என்ற ரூட்டிலும் பயணித்து வருபவர் தான் ஆர் ஜே பாலாஜி. பல திரைப்படங்களில் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், நானும் ரவுடிதான் திரைப்படத்தில் காமெடியில் கலக்கி இருந்தார். இதன் காரணமாக, நிறைய படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

அப்படி இருக்கையில், எல்கேஜி என்ற திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக மாறி இருந்த ஆர்ஜே பாலாஜி, இந்த திரைப்படத்திற்கு பின்னர் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம், ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் என பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இதில் மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம் ஆகிய திரைப்படங்களில் இயக்குனராகவும் அவர் பணிபுரிந்து இருந்தார்.

இதில் கோகுல் இயக்கத்தில் அவர் நடித்திருந்த சிங்கப்பூர் சலூன் திரைப்படம், சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அடுத்து சில திரைப்படங்களிலும் நடித்து வரும் ஆர் ஜே பாலாஜி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கிரிக்கெட் போட்டிகளில் தமிழ் வர்ணனையில் ஈடுபட்டு வருகிறார். ஐபிஎல் தொடர்களின் போது அவர் ஜாலியாக கிரிக்கெட் தாண்டி பேசும் பல விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவதால் அவரது கமெண்டரிக்காகவே கிரிக்கெட்டை கண்டுகளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏ ஆர் ரஹ்மானுடனான சந்திப்பு குறித்து ஒரு நேர்காணலில் ஆர் ஜே பாலாஜி பேசியிருந்த விஷயங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. “ஒருமுறை நான் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களை இரண்டரை மணி நேரம் நேரில் சந்தித்து பேசி இருந்தேன். அப்போது ரஹ்மான் சார் என்னிடம் அவருக்கும் மைக்கேல் ஜாக்சனுக்கும் இடையே நடந்த சந்திப்பு பற்றி பேசி இருந்தார்.

மைக்கேல் ஜாக்சனை சந்திக்க ரஹ்மான் விருப்பம் தெரிவிக்க, ஆஸ்கார் வென்று விட்டு வந்தால் சந்திப்பதாக கூறியுள்ளார் ஜாக்சன். தொடர்ந்து இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றதும் மைக்கேல் ஜாக்சனே அவரை அழைத்து சந்தித்து பேசி உள்ளார். இவர்கள் இருவரின் சந்திப்பு சில மணி நேரமும் நடந்த பின்னும் ஒரு கூட போட்டோவே எடுக்காமல் ரஹ்மான் திரும்பி உள்ளார். ஆனால் அந்த தருணத்தை எப்போதும் நினைத்து பெருமைப்படுவதாகவும் ரஹ்மான் என்னிடம் கூறினார்.

தொடர்ந்து நானும் அவரும் பேசி முடித்த பின்னர் கிளம்பினேன். அப்போது என்னிடம் ஃபோட்டோ எடுத்துக் கொள்ளவில்லையா என்று ரஹ்மான் என்னிடம் கேட்டார். இல்லை எனக்கு இது மைக்கேல் ஜாக்சன் தருணம் என கூறிவிட்டு நான் வந்தேன்” என ஆர் ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...