முகப்பரு குறித்த கவலை இனி வேண்டாம்… காரணம் மற்றும் தடுக்கும் வழிமுறையை அறிந்து கொள்ளுவோம்!

முகத்தில் பெரும்பாலும் வரக்கூடிய பொதுவான ஒரு சரும பிரச்சனை முகப்பரு. முகப்பரு பெரும்பாலும் பதின்ம வயதினருக்கு அதிகம் வரும் என்று கூறுவார்கள் ஆனால் சிலருக்கு பதின்ம வயதில் மட்டும் இல்லாமல் 40, 50 வயதில் கூட இந்த முகப்பருக்கள் வரும்.

சிலருக்கு முகப்பரு தோன்றி சில நாட்களில் மறைந்து விடும். சிலருக்கு நீண்ட காலம் முகத்தில் மறையாமல் இருப்பதோடு சருமத்தின் மேல் கருமையான தழும்புகளையும் விட்டு தான் செல்லும்.

acne 2

முகப்பரு ஏற்பட காரணம் என்ன?

சருமத்தில் உள்ள சிறு சிறு துளைகளில் எண்ணெய், மாசுக்கள், மற்றும் இறந்த செல்களால் அடைப்புகள் ஏற்படும் பொழுது முகப்பருக்கள் தோன்றும்.

சிலருக்கு இது பரம்பரையாகவும் இருக்கலாம்.

முறையற்ற உணவு பழக்க வழக்கங்களாலும் முகப்பரு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதிக எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளை உண்ணும் பொழுது முகப்பரு தோன்றும்.

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினாலும் முகப்பரு உண்டாகும்.

மன அழுத்தம், கிருமிகள் தொற்று போன்ற காரணங்களினாலும் முகப்பரு தோன்றலாம்.

acne 3

உங்களுக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிகிறதா.. கவலை வேண்டாம் எண்ணெய் சருமம் உடையவர்களுக்கு எளிய வீட்டு குறிப்புகள்!

முகப்பரு வராமல் தடுக்க என்னனென்ன செய்ய வேண்டும்?

தினமும் முகத்தை நன்கு கழுவ வேண்டும். ஒரு நாளைக்கு இருமுறை முகத்தை சுத்தம் செய்தல் அவசியம். முகத்தில் படிந்துள்ள எண்ணெய் அழுக்கு மற்றும் வியர்வை ஆகியவற்றை நீக்கி முகத்தை சுத்தமாய் வைத்திருக்க வேண்டும்.

முகத்தினை மாய்ஸ்ரைஸ் செய்து வைக்க வேண்டும். முகம் நல்ல நீரேற்றத்துடன் இருத்தல் அவசியம். முகம் வறட்சியாக இருக்கும் பொழுது எண்ணெய் உற்பத்தி எதிர் சமநிலை அடைந்து சருமத்தில் பிரச்சனையை உண்டு பண்ணும்.

ஒப்பனைகளை குறைந்த அளவில் மட்டுமே செய்து கொள்ளவும். முகத்தின் துவாரங்களை அடைக்கும் அளவிற்கு ஒப்பனை வேண்டாம். சருமத்தில் உள்ள துளைகள் சுவாசிக்க வேண்டும் அதனால் குறைந்த அளவிலான ஒப்பனைகளை மட்டுமே செய்து கொள்ளலாம்.

acne 1

நாம் வெளியிடங்களுக்கு சென்று பலவகையான பொருட்களை நம் கைகளால் தொடுகின்றோம். பயணத்தின் போதும் பல இடங்களில் நம்முடைய கைகளை வைக்கின்றோம். சுகாதாரமற்ற நிலையில் உள்ள கைகளை முகத்தில் வைக்கும் பொழுது அது தொற்றுக்களை உண்டாக்கும் எனவே அவ்வபோது கைகளையும் சுத்தம் செய்து கொள்ளவும்.

முகத்தில் ஏதேனும் சிறிய பருக்கள் தோன்றினால் உடனடியாக அதை உடைக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. பருக்களை உடைத்து விடும் பொழுது அதிலிருந்து ரத்தம் வெளியேறி மேலும் சிக்கலை உண்டு பண்ணும் எனவே ஒருபோதும் அதனை உடைக்கக்கூடாது.

வாரம் இரு முறை முகத்தை எக்ஸ்போலியட் செய்து முகத்தில் உள்ள இறந்த செல்கள், எண்ணெய் மற்றும் மாசுக்களை அகற்ற வேண்டும்.

துரித உணவுகள் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான பழங்கள், நட்ஸ் மற்றும் காய்கறிகளை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது.

முகப்பரு என்பது சாதாரண சரும பிரச்சனை தான். அதனை சரி செய்ய இயற்கையான பல வழிமுறைகளும் உண்டு பல அறிவியல் பூர்வ மருத்துவ சிகிச்சைகளும் உண்டு. முகப்பரு என்பது மிகப்பெரிய நோய் அல்ல இது குறித்து தேவையில்லாத அச்சத்தையும் பதட்டத்தையும் வரவழைத்து கொள்ளுதல் வேண்டாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews