8 வருசமா ஆர்சிபியால் முடியாத சம்பவம்.. கம்பீரின் கொட்டத்தை அடக்கி சாதனை புரிவாரா கோலி?..

ஐபிஎல் தொடரில் யுத்தம் நடப்பது போன்ற போர்க்களத்தில் இருக்கும் ஒரு உணர்வை தரும் போட்டி தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தற்போது மோதி வரும் போட்டி. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தான் இந்த போட்டி நடைபெற்று வருகின்ற நிலையில் இதன் பின்னால் இதற்கான காரணமும் பெரிதாக உள்ளது.

அதாவது கொல்கத்தாவில் கம்பீர் ஆலோசகராக உள்ள நிலையில் இன்னொரு புறம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கோலி இடம் பெற்றுள்ளார். இவர்கள் இருவருமே மாறி மாறி பல போட்டிகளில் மோதிக்கொண்டிருந்த சூழலில் கடந்த ஆண்டு கூட லக்னோ அணியின் ஆலோசராக கம்பீர் இருந்த போது கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறி இருந்தது.

அது மட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரில் குறைந்தபட்ச ஸ்கோரான ஆர்சிபியின் 49 ரன்கள் என்பது கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்தது. இப்படி முழுக்க முழுக்க ஐபிஎல் தொடரில் பெங்களூரை விட ஒரு படி மேலே உயர்ந்து நிற்கும் கொல்கத்தா அணி இந்த முறையும் அவர்களை வீழ்த்துமா அல்லது ஆர்சிபி அணி வெற்றி பெறுமா என்பதை அறியவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இன்னொரு பக்கம் இதுவரை 16 ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட ஆர்சிபி அணி கோப்பையை வென்றது கிடையாது. ஆனால், இரண்டு முறை கொல்கத்தா அணி கம்பீர் தலைமையில் கோப்பையை கைப்பற்றிய நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகும் மீண்டும் கொல்கத்தாவின் ஆலோசராக கம்பீர இணைந்தது அந்த அணியின் பிளஸ் பாயிண்ட் ஆகவும் பார்க்கப்படுகிறது.

அப்படி ஒரு சூழலில், கடந்த எட்டு வருடங்களாக ஆர்சிபி அணி கொல்கத்தாவிற்கு பிறகு செய்யாத ஒரு விஷயம் பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம். இந்த சீசன் முழுக்க இதுவரை நடந்த ஒன்பது போட்டிகளிலும் சொந்த மண்ணில் ஆடிய அணி தான் வெற்றி கண்டுள்ளது. இதனால் ஆர்சிபி, பெங்களூர் மைதானத்தில் கொல்கத்தாவை வீழ்த்தும் என நாம் எதிர்பார்த்தாலும் இன்னொரு பக்கம் கடந்த எட்டு ஆண்டுகளாக பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் இந்த மைதானத்தில் மோதிய 5 போட்டிகளில் ஆர்சிபி தோல்வி அடைந்துள்ளது.

சொந்த மைதானம் என்ற போதிலும் கொல்கத்தாவை மட்டும் இங்கே கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து திணறிவரும் நிலையில் இந்த முறையாவது அவர்களை தோற்கடித்து தொடர் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது தான் ஆர்சிபி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...