பொழுதுபோக்கு

சாமானியன் விமர்சனம்: ராமராஜனின் ‘துணிவு’ தூள் கிளப்பியதா?.. படம் எப்படி இருக்கு?..

இயக்குனர் ராகேஷ் இயக்கத்தில் ராமராஜன், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ராதாரவி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள சாமானியன் திரைப்படம் இன்று வெளியானது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக நடித்துள்ள ராமராஜனுக்கு இந்த படம் வெற்றி படமாக அமையுமா? என்பது குறித்த விமர்சனத்தை இங்கே காணலாம்.

சாமானியன் விமர்சனம்:

ரிட்டயர்டு ஆன ராணுவ அதிகாரி சங்கரநாராயணன் கதாபாத்திரத்தில் ராமராஜன் நடித்துள்ளார். தனது நண்பர் மூக்கன் மற்றும் முஸ்லிம் நண்பர் ஃபைசல் உடன் இணைந்து கொண்டு வங்கி ஒன்றுக்கு எதிரான போராட்டத்தை ராமராஜன் நடத்துகிறார்.

மூக்கன் கதாபாத்திரத்தில் எம்.எஸ். பாஸ்கரும், இஸ்லாமிய நண்பராக ராதா ரவியும் நடித்துள்ளனர். 63 வயதாகும் ராமராஜன் ரிட்டையர் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் வயதானவராக நடித்துள்ள நிலையில், அவரது உடல் தோற்றம் படத்தின் கதையில் இருந்து மாறுபடவில்லை.

பல வருடங்களுக்கு பிறகு ராமராஜன் படத்தை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் ஆறுதல் பரிசாகவே இருக்கும். படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே ராமராஜன் எடுத்துக்கொண்ட ஆபரேஷனை தனது நண்பர்களுடன் சேர்ந்து செயல்பட ஆரம்பித்து விடுவார். அதற்கான காரணம் இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் விரியும்.

முதல் பாதியில் வங்கியில் நடக்கும் அந்த காட்சிகள் பெரிதாக ரசிகர்களை கவரும் விதமாக இல்லை. ஆனால் அதற்கான காரணத்தை சொல்லும் இரண்டாம் பாகம் நிச்சயம் சாமானியர்களை கண்கலங்க செய்யும். அவர்களை கனெக்ட் செய்யும் விதமாகவே இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ராமராஜன் சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்று இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற முயற்சியில் இந்த படத்தை எடுத்துள்ளதாக கூறினார்.

வீடு கட்டுவதற்காக வங்கியில் வாங்கப்படும் கடன் காரணமாக சாமானியர்கள் படும் அவஸ்தையையும், வரிகளைக் கட்டியே வாழ்க்கையை தொலைத்து விடும் அவலத்தையும் இந்த சாமானியன் திரைப்படம் பேசுகிறது. ஆனால் பல இடங்களில் திரைக்கதை மற்றும் மேக்கிங் டல் அடித்து காணப்படுவதால் இந்த படமும் வசூல் ரீதியாக எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.

இளையராஜா இசையில் ராமராஜன் நடித்து வெளியான படங்களின் பாடல்களையும் சில இடங்களில் பயன்படுத்தி இருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்ட மனநிலையை கொடுக்கின்றன. இயக்குநர் ராகேஷ் இன்னமும் கொஞ்சம் சிரமப்பட்டு சில விஷயங்களை மாற்றி இருந்தால் இந்த படம் நிச்சயமாக அனைவரையும் சென்று சேர்ந்திருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

சாமானியன் – சாமானியர்களுக்காக!

ரேட்டிங் – 2.75/5.

Published by
Sarath

Recent Posts