காசில்லாமல் தெருவில் பட்டினி கிடந்த காமெடி நடிகர்.. முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து உயரம் தொட்ட அசத்தல் பின்னணி..

தமிழ் சினிமாவில் பழைய காலத்து திரைப்படங்களை ரசிக்கும் நபர்கள், நிச்சயம் டி.ஆர். ராமச்சந்திரனை கவனிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். நாகேஷ், என். எஸ். கிருஷ்ணன் என அந்த காலத்து நகைச்சுவை நடிகர்கள் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த போது, அதில் தனக்கென ஒரு இடத்தை ராமச்சந்திரனும் உருவாக்கி இருந்தார்.

அந்த காலத்தில் நகைச்சுவை நடிகராக இருந்ததுடன் மட்டுமில்லாமல், நிறைய படங்களில் நாயகனாகவும் தோன்றி இருந்தார் ராமச்சந்திரன். அவரது உடல் மொழி மற்றும் காமெடி குணங்கள் தான் அவரை படத்தின் காட்சியில் பார்க்கும் போதே நம்மை அவர் பக்கம் ஈர்க்க வைக்கும். மக்களுக்கு தேவையான கருத்துக்களை காமெடி கலந்து அற்புதமாக அதை தனது உடல் மொழியுடன் சேர்த்து திரையில் வழங்குவதில் கில்லாடியாக இருந்தவர் ராமசந்திரன்.

அதிலும் அந்த சமயத்தில் நிறைய காமெடி படங்கள் மக்களை வெகுவாக கவர்ந்ததால், ஏராளமானோர் ராமச்சந்திரனை அதிகம் ரசிக்கத் தொடங்கினர். இன்று காமெடி நடிகர்கள் பெரும்பாலும் நாயகர்களாக நடித்து வரும் சூழலில், இதற்கெல்லாம் முன்பே சுமார் 1930-களிலேயே காமெடியனாகவும், மறுபக்கம் கதையின் நாயகனாகவும் நடித்திருப்பார் ராமச்சந்திரன்.

இளம் பருவத்திலேயே சங்கீதமும் கற்று தேர்ந்தார் ராமச்சந்திரன். தொடர்ந்து, அப்படியே அவருக்கு நாடகங்கள் மீதும், நடிப்பின் மீதும் தீராத காதல் உருவானது. பின்னர் நாடக சபை ஒன்றில் சேர்ந்த ராமச்சந்திரன், சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அப்படி இருக்கையில், திரைப்படத்திலும் நல்ல நல்ல வாய்ப்புகள் அவரை தேடி வந்த வண்ணம் இருந்தது.

இதற்கு மத்தியில் அந்த நாடக கம்பெனி நடத்தி வந்த உரிமையாளர் திடீரென காணாமல் போக, ராமச்சந்திரனும் குழுவில் இருந்த சிறுவர்களும் உணவுக்காக தெருக்களில் நடனமாடி பணம் சம்பாதிக்கும் நிலை உருவானது. சில நாட்களில் உணவில்லாமல் பட்டினியுடன் கிடக்கும் அவல நிலையும் உருவானது. இந்த நிலையில், அந்த நாடக குழுவிற்கு புதிய உரிமையாளரும் கிடைக்க பின்னர் மீண்டும் நாடகத்தில் ஈடுபட்டு வந்த ராமசந்திரனின் நடிப்பு, ஏ.வி. மெய்யப்ப செட்டியார் கவனத்தை பெற்றது.

இதன் பின்னர் திரைப்படத்திலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வர, இரண்டாம் உலக போர் சமயத்தில் துவண்டு போன மக்களை மகிழ்ச்சிப்படுத்த ராமச்சந்திரனை வைத்து காமெடி திரைப்படத்தையும் உருவாக்கினார் ஏ.வி. மெய்யப்ப செட்டியார். அது மட்டுமில்லாமல், காமெடி நடிகராக இருந்தாலும் அந்த சமயத்தில் உச்சத்தில் இருந்த நடிகைகளுடனும் ஜோடியாக நடித்துள்ளார் ராமச்சந்திரன்.

பத்மினி, சாவித்திரி, அஞ்சலி தேவி, வைஜயந்திமாலா என அந்த சமயத்தில் தமிழ் சினிமாவை கலக்கிய பல நடிகைகளுடன் சேர்ந்து கதாநாயகனாக நடித்துள்ளார் டி.ஆர். ராமசந்திரன். தமிழ் சினிமாவின் வரலாற்றில் நிச்சயம் ராமச்சந்திரனின் தாக்கம் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews