இது படம் இல்ல… பாடம்.. ஜிகர்தண்டா XX-ஐ தூக்கிக் கொண்டாடிய சீமான்

அப்படி என்ன தான் மந்திரம் போட்டு படம் எடுத்தாரோ கார்த்திக் சுப்புராஜ்..! ஜிகர்தண்டா XX-ஐ தூக்கிக் கொண்டாடுகிறார்கள் ரசிகர்களும், பிரபலங்களும். தீபாவளி ரிலீஸ்-ல் ஜப்பான், ரெய்டு ஆகியவை சோடை போக பந்தயக் குதிரையாய் களத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது ஜிகர்தண்டா XX. இதுவரை இருந்த ராகவா லாரன்ஸ்-ஐ நடிகனாக வேறொரு தளத்தில் உட்கார வைத்த படம். கார்த்திக் சுப்புராஜை சினிமா உலகமே தூக்கிக்  கொண்டாடிக் கொண்டிருக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான் கார்த்திக் சுப்புராஜை பாராட்டி  அறிக்கை வெளியிட்டிருக்கிறார்,

அந்த அறிக்கையில்,“ பூர்வகுடி மக்களின் வலிமிகுந்த வாழ்வியல் காவியம்! உலகெங்கும் பூர்வகுடி மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் மிக முக்கிய வாழ்வியல் சிக்கலை கதைக்களமாக கொண்டு, தற்காலச் சூழலில் சொல்லப்பட வேண்டிய மிக அழுத்தமான கருத்தினை மிக அழகாக திரையில் காட்சிப்படுத்தியுள்ளார் தம்பி கார்த்திக் சுப்புராஜ்.

காடு மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் மிக முக்கியமானது என்பதனை இத்திரைப்படம் வலியுறுத்துகிறது. அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியலை அழுத்தமான உரையாடல்களோடு இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மிகச்சிறப்பானது.

கோடிக்கணக்கான உயிரினங்கள் இன்றளவும் காடுகளை நம்பியே வாழ்கின்றன. அத்தகைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த பல்லுயிர்ப் பெருக்க வாழ்விடமாக விளங்கக்கூடிய வனங்களையும், அதன் வளங்களையும் அழித்தொழிப்பதென்பது எத்தகைய பேராபத்தினை ஏற்படுத்தும் என்பதை மிக ஆழமாக பதிவுசெய்யுள்ளர் தம்பி கார்த்திக் சுப்புராஜ்.

பா.ரஞ்சித் வரிசையில் ஓடிடி-க்குத் தாவிய மாரி செல்வராஜ்.. அடுத்த பட ஹீரோ யாரு தெரியுமா?

இதை வெறும் படம் என்று கூறிவிட முடியாது. நம் அனைவருக்குமான பாடம். நாம் காட்டுவாசி, ஆதிவாசி என்றெல்லாம் வாய்மொழியாக கூறிவிடுகிறோம். உண்மையில் அவர்கள் மலைவாழ் மக்கள். நம் மண்ணின் தொல்குடி மக்கள். காடும், காடு சார்ந்த நிலத்திற்கும் பாதுகாப்பு அரணே அவர்கள்தான். ஆனால் இன்றைக்கு வளவேட்டைக்காக முதலில் பலியிடப்படுவதும் அம்மக்கள்தான். தண்டகாரண்யத்தில் பச்சை வேட்டை என்றொரு திட்டத்தைத் தொடங்கி அங்கு இருக்கும் 250 இலட்சம் கோடி மதிப்பிலான வளங்களை எடுப்பதற்காக அங்கு வாழும் மக்களை அப்புறப்படுத்த முனைந்தபோது, உங்களுக்கு இது காடு, எங்களுக்கு இது வீடு இதை விட்டு செல்லமாட்டோம் என்று மறுத்துவிட்டனர். அந்த கருத்தைத்தான் இத்திரைப்படமும் வலியுறுத்துகிறது.

தம்பி கார்த்திக் சுப்புராஜ் அவர்களால் மிகுந்த சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். நான் தரையில் பேசுவதை தம்பிகள் திரையில் நேர்த்தியாக மொழிப்பெயர்த்துள்ளதைக் கண்டபோது, இத்திரைப்படம் என் இதயத்திற்கு நெருக்கமாக நேரடித் தொடர்பினை ஏற்படுத்திவிட்டது.

இத்திரைப்படத்தில் என்னுடைய தம்பி எஸ்.ஜே.சூர்யா அவர்கள் இதுவரை இல்லாத வகையில் நடிப்பில் புதியதொரு பாய்ச்சலை வெளிப்படுத்தியுள்ளார். மீண்டும் கதையின் நாயகனாக வேறு ஒரு பரிணாமத்தில் தோன்றி அசத்தியுள்ளார். அதைப்போன்று தம்பி ராகவா லாரன்சு அவர்களுக்கும் இது முற்றிலும் மாறுதலான படமாக அமைந்துள்ளது. இரு நாயகர்களுமே போட்டி போட்டு நடித்து படத்தினை வெற்றிப்பெறச்செய்துள்ளனர்.

இப்படியொரு அழுத்தமான கதையினை திரைப்படமாக எடுக்க முன்வந்த தயாரிப்பு நிறுவனத்திற்கும், படம் மிகச்சிறப்பாக வெளிவந்து வெற்றி பெற்றுள்ளமைக்குக் காரணமான திரைக்கதை, கதைக்களம், திரை உருவாக்கம் என அனைத்திலும் தனக்கென்று தனிவழியைப் பின்பற்றி ஆகச்சிறந்த படைப்புகளை அளித்து வரும் இயக்குநர் தம்பி கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கும், தம்பிகள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்சு ஆகியோருக்கும், கதை மாந்தர்களாக நடித்துள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.“

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் ஜிகர்தண்டா xx படத்தைப் பாராட்டியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...