ஜோதிடர் சொன்ன வார்த்தையை தவிடுபொடியாக்கிய பிரபல பாடகர்.. ஜெமினியின் குரலாகவே ஒலித்த பி.பி.ஸ்ரீனிவாஸ்!

தமிழ் இலக்கணத்தின் அத்தனை அணிகளையும் ஒன்றாய்ப் போட்டு உருவான பாடல்தான் காலங்களில் அவள் வசந்தம்.. பாவ மன்னிப்பு படத்தில் ஜெமினி கணேசன் சாவித்ரியை நினைத்து பாடும் அந்தப் பாடல் இப்போது கேட்டாலும் தமிழருவியாய் கொட்டும். எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் வரிகளுக்கு தனது மென்மையான குரலால் உயிர் கொடுத்திருப்பார் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள். சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.எஸ்., திருச்சி லோகநாதன் போன்றோர் முன்னணியில் இருந்த காலகட்டத்தில் ஜெமினி கணேசனுக்காகவே இவர் குரல் படைக்கப்பட்டது போல் அவருக்காக பல ஹிட் பாடல்களைப் பாடினார் பி.பி. ஸ்ரீனிவாஸ்.

ரோஜா மலரே ராஜகுமாரி, இன்பம் பொங்கம் வெண்ணிலா வீசுதே, மயக்கமா கலக்கமா போன்ற காலத்தால் அழியாத பல எவர்கிரீன் பாடல்களைப் பாடி இன்றும் ரசிகர்கள் மனதில் நிற்கிறார் பி.பி.ஸ்ரீனிவாஸ்.

இவரது தாய் இசை ஆர்வம் கொண்டவராக இருந்ததால் அதன் தாக்கம் அப்படியே இவரையும் இசையில் ஈடுபடவைத்தது. ஆனால் இவருடைய பெற்றோர்கள் இவரை ஒரு அரசு பணியாளராக்க விரும்பி, இவரை பி. காம் படிக்க வைத்தனர். பின்னர் இளங்கலையில் பட்டம் பெற்ற அவரை ஒரு வழக்கறிஞராக்க வேண்டி, சென்னை சட்டக் கல்லூரியில் சேர்த்தனர். ஆனால், இசையில் அவருக்கு இருந்த ஆர்வமும் ஈடுபாடும் அவரை இசைத் துறைக்கே கொண்டுவந்து சேர்த்தது.

வரி கட்ட விலக்கு வாங்க நடிகர் சொன்ன பகீர் ஐடியா… ஒரு கனம் அதிர்ந்து போன இயக்குநர்

இவர் சினிமாவில் ஜொலிப்பாரா என்பதை அறிய ஒரு புகழ்பெற்ற ஜோதிடரிடம் இவரை அழைத்துச் சென்று வருங்காலம் குறித்துக் கேட்டிருக்கின்றனர் அவரது பெற்றோர். ஜோதிடரோ பி.பி.ஸ்ரீனிவாஸ் சினிமாவில் ஜொலிக்க மாட்டார் எனக் கூற, உடனே ஜோதிடரிடம் சபதம் விட்டார் ஸ்ரீனிவாஸ். சினிமாவில் நுழைந்து நான் ஜெயித்துக் காட்டுவேன் என்று கூற ஜோதிடரும் அவரின் இசைத் தாகத்தை அறிந்து அவரை வாழ்த்தி அனுப்பியுள்ளார்.

அன்று தொடங்கிய இசைப் பயணம்தான் 2013-ம் ஆண்டு வரை ஒலித்தது. ஏ.எம்.ராஜாவை அறிமுகப்படுத்திய ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன்தான் பி.பி.ஸ்ரீனிவாஸையும் பின்னணிப் பாடகராக அறிமுகப்படுத்தினார். ஜெமினியின் ‘மிஸ்டர் சம்பத்’ படத்தில்தான் பி.பி.ஸ்ரீனிவாஸ் பின்னணிப் பாடகராக அறிமுகம் ஆனார். ஆனால் ஜெமினிக்காக இவர் பாடிய இன்பம் பொங்கும் வெண்ணிலா பாடல மூலம் தான் பிரபலம் ஆனார்.

கர்நாடக இசை மட்டுமின்றி இந்துஸ்தானி இசையிலும் வட இந்தியப் பாடகர்களுக்கு நிகரான திறமை கொண்டவர் பி.பி.ஸ்ரீனிவாஸ். மேலும் கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் ஆஸ்தான பின்னணிப் பாடகராகவும்ஜொலித்தார் ஸ்ரீனிவாஸ். 12 மொழிகளில் பல ஆயிரம் பாடல்களைப் பாடி சாதனை புரிந்திருக்கிறார். மேலும் ஒன்றரை லட்சம் கவிதைகளையும் புனைந்து இயல், இசை இரண்டிலும் வல்லவராகத் திகழ்ந்தார் பி.பி.ஸ்ரீனிவாஸ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.