நெல்லை மாவட்டம் என்றாலே சுடலை மாடசாமிதான்

e807d29f5f39dfee2e71db657a39bd88

தமிழகத்தில் நெல்லை மாவட்ட வட்டார வழக்கும் அந்த மனிதர்களின் பண்பாடு பழக்க வழக்கங்களும் கொஞ்சம் வித்தியாசமானது. தாமிரபரணி பாயும் நெல்லையில் பல தெய்வங்கள் இருந்தாலும் . இவ்வட்டார மக்கள் பெரும்பாலும் இம்மண்ணை காக்கும் எல்லை தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் வணங்குவது சுடலை மாடசாமியைத்தான்.

சுடலை மாடசாமி கோவில்கள் நெல்லை மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உண்டு. வருடா வருடம் சுடலை மாடசாமிக்கு கொடைவிழா நடத்துவார்கள்.

என்ன ஒரு பிரச்சினை என்றாலும் காத்து கருப்பு என எக்கோளாறாக இருந்தாலும் வாழ்வில் முன்னேற்றம் வேண்டும் என்றாலும் இப்பகுதி மக்கள் ஆத்மார்த்தமாக வணங்கும் கடவுள் சுடலை மாடசாமிதான்.

இப்பகுதியில் உள்ள சீவலப்பேரியில் உள்ள மாடன் கோவில் புகழ்பெற்றது. இந்த சுடலை மாடனை பற்றி தமிழ் சினிமாவில் சின்னத்தாய் என்ற படத்தில் விரிவாக காண்பித்திருப்பார்கள்.

சுடலை மாடன் ஒரு கிராம காவல் தெய்வம் ஆகும். சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த மகனாக இவர் கருதப்படுகிறார். சுடலை மாடன் வழிபாடு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகம் உள்ளது . 

பெரிய மண்டபங்களை மாடம் என கூறுவர்.பார்வதி கயிலாயத்தில் ஆயிரம் தூண்களை கொண்ட மண்டபத்தில் உள்ள தூண்விளக்கு சுடரில் பிறந்ததால் மாடன் எனவும் சுடலை என்பது உயிரற்ற உடலை குறிக்கும் மயானத்தில் எரிந்த பிணத்தை உண்டதால் சுடலைமாடன் என பெயர் பெற்றார்.காளை உருவம் எடுத்து பகவதியம்மன் கோயில் கோட்டையை சிதைத்ததால் இவர் காளையின் தலையுடனும் காட்சியளிப்பதுண்டு.

இந்த சுடலை மாடனுக்கு மூன்று விதமான பலிகள் தரப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஆற்றங்கரை சுடலைமாடசாமி கோயில், திருநெல்வேலி மாவட்டம் முதலைக்குளம் & கரந்தாநேரி மயிலாடும் பாறை சுடலை மாடன், சீவலப்பேரி சுடலை மாடன் கோயில் ,சங்கனாபுரம்-அருள்மிகு ஸ்ரீ வடக்கு-அத்தியான் சுடலை மாடசாமி திருக்கோவில் , பாலாமடை கீழக்கரை சுடலை மாடன் கோவில், தென்கலம்புதூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் அமைந்திருக்கும் ஐகோர்ட் மகாராஜா கோவில், சிறுமளஞ்சி(ஏர்வாடி) சுடலை மாடன் கோயில், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள‌ ஊர்காடு(உய்காடு)சுடலை மாடன் கோயில், வள்ளியூர் அருகில் உள்ள கலந்தபனை உய்க்காட்டு சுடலை ஆண்டவர் கோவில்,நெல்லை மாவட்டம் பழவூர் எலந்தையடி சுடலை மாடன் கோயில்,கன்னன்குளம் பெருமாள்புரம் ஸ்ரீ தோட்டக்கார மாட சுவாமி திருக்கோவில் போன்றவை மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் சிலவாகும்.

இப்பகுதி மக்களின் நம்பிக்கையான தெய்வமாக சுடலைமாடன் இப்பகுதி மக்களின் எக்குறையையும் தீர்த்து அருள்பாலிக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews