அப்பாவும், மகனும் இசையால் ஆட்டிப் படைத்த இதயம்.. 80, 90களின் காதலர்களை உருக வைத்த காதல் தீம்…

தமிழ் சினிமாவின் சிறந்த காதல் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் இதயம் படத்தினைத் தவிர்த்து எழுத முடியாது. இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1991-ல் முரளி, ஹீரா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் இதயம். One Side Love -ஐ இந்தப் படத்தினைக் காட்டிலும் வேறு எந்தப் படமும் இதுவரை இவ்வளவு அழகாகச் சொல்லியதில்லை. தனக்குள் இருக்கும் காதலை முரளி கடைசி வரை கூறாமலேயே மனதிற்குள் பூட்டி வைத்து திரையில் பார்க்கும் நம்மையும் எப்போது சொல்லுவார் என உருக வைப்பார்.

முரளியின் அற்புதமான நடிப்பு இந்தப் படத்தில் மிக அழகாக வெளிப்பட்டிருக்கும். இதற்காகவே இயக்குநர் கதிருக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம். இதயம் படத்தில் இயக்குநர், ஹீரோவுக்கு அடுத்து பேசப்பட்டது இளையராஜாவின் இசைதான். மொத்தப் படத்தினையும் தமது தோளில் தாங்கியிருந்தார்.

இந்தப் படத்தின் தீம் மியூசிக்கை கேட்டுப் பாருங்கள். ஒருகணம் உங்களது பழைய காதல் கண்முன் வந்து போகும். இவ்வாறு இசையில் நம்மைக் கரைய வைத்த இசைஞானியின் இந்த இசையை அவரது குழுவில் உருவாக்கியவர் யார் தெரியுமா? வேறு யாருமல்ல அவரது மகனான கார்த்திக் ராஜாதான்.

தமிழ் சினிமாவில் கார்த்திக் ராஜாவின் பங்களிப்பு சற்று குறைந்ததாக இருப்பினும் தனது தந்தையுடனே தனது உழைப்பு அனைத்தையும் கொட்டியிருக்கிறார். 13 வயதிலேயே இசையமைக்கத் தொடங்கியவர் இளையாராஜாவுடன் நாயகன் படத்தில் பின்னணி இசையில் பெரும் பங்கெடுத்திருக்கிறார். மிகச்சிறந்த கீபோர்டு மற்றும் பியானோ இசைக் கலைஞராக விளங்கும் கார்த்திக்ராஜா இதயம் படத்தின் தீம் மியூச்சிக்கை வாசித்திருக்கிறார்.

எப்படி ஏ.ஆர். ரஹ்மான் இளையாராஜாவின்பட்டறையில் இருந்து புன்னகை மன்னன் தீம் மியூசிக்கில் புதுமை காட்டினாரோ அதேபோல் கார்த்திக் ராஜாவும் தன் தந்தையின் இசையில் உருக வைக்கும் இதயம் தீம் மியூசிக்கை உருவாக்கியிருப்பார். பின்னர் இந்த தீம் பாடலை அவர் எங்கிருந்து எடுத்தார் தெரியுமா..? அதுவும் தன் தந்தையின் இசையில் தான்.

மண் வாசனை படத்தில் நடந்த அந்த ஒரு சம்பவம்.. ரேவதியின் முதல் பட அனுபவம்

அரங்கேற்ற வேளை படத்தில் வரும் ‘ஆகாய வெண்ணிலாவே..‘ பாடலில் வரும் முதல் இசையை அப்படியே எடுத்துப்போட்டு அதில் மெருகூட்டி இதயம் தீம் மியூசிக்காக உருவாக்கியிருப்பார் கார்த்திக் ராஜா. மேலும் சூப்பர் ஸ்டாரின் பாண்டியன் படத்தில் வரும் பாண்டியனின் ராஜ்ஜியத்தில்.. பாடலில் வரும் முதல் பியானோ இசையும் கார்த்திக் ராஜாவால் இசைக்கப்பட்டதே.

இப்படி தன் தந்தையுடன் இணைந்து பல அவர் பெயர் வெளியே தெரியாத அற்புத இசையை உருவாக்கி தமிழ் ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார் கார்த்திக் ராஜா. மேலும் தனி இசையமைப்பாளராக உள்ளம் கொள்ளை போகுதே, உல்லாசம், டும் டும் டும் உள்ளிட்ட பல படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...