பொழுதுபோக்கு

சிஎஸ்கேவுக்காக கூட தோனி செய்யாத விஷயம்.. இந்திய அணி ஜெயிச்சதும் தல செஞ்ச அதிரடி சம்பவம்..

தோனிக்கு பிறகு இந்திய அணிக்காக உலகக் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை ஒரு சில முறை கோலி மற்றும் ரோஹித் சர்மா தவற விட்டிருந்தனர். ஆனால், இந்த முறை அதனை கெட்டியாக பிடித்துக் கொண்டு பட்டையை கிளப்பி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

ஆறு ஆண்டு இடைவெளிகளில் மூன்று ஐசிஐ கோப்பையை ஒரு காலத்தில் வென்றிருந்தது இந்திய அணி. 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2011ம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்து சிறிய இடைவெளியில் முக்கியமான கோப்பைகளை எல்லாம் சொந்தமாக்கிய இந்திய அணியால் கடந்த 11 வருடங்களில் எந்த ஒரு கோப்பையும் கைப்பற்ற முடியாமல் போயிருந்தது.

இதனால் தொடர்ந்து பல ஐசிசி தொடர்களில் இந்திய அணி நாக் அவுட் போட்டிகளுடன் தோற்று வெளியேறும் போதெல்லாம் ரசிகர்கள் அதனை மறக்க முடியாமல் தொடர்ந்து ஏங்கிக் கொண்டு தான் இருந்தனர். அந்த வகையில் 2019 அரைஇறுதி தோல்வி, 2023 இறுதிப் போட்டி தோல்வி என பலதை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இப்படி பல வேதனைகளுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடர் வெற்றி, நிச்சயம் மிகப்பெரிய மருந்தாக தான் மாறி உள்ளது. ரோஹித் தலைமையில் இந்தியாவில் இடம் பெற்றிருந்த பெரும்பாலான வீரர்கள் பட்டையை கிளப்ப, எந்த தவறும் செய்யாமல் மிகச் சிறப்பாக வந்த பணியை செய்து முடித்திருந்தனர்.

இதன் மூலம் பல ஆண்டுகளாக கைக்கூடாமல் இருந்த ஐசிசி டிராபிக்கும் ஒரு முற்றுப்புள்ளி கிடைக்க, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரும் தங்கள் பணி முடிந்த பின்னர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ளனர். இனிவரும் இளம் வீரர்களும் அவர்களது பாதையை பின்பற்றி வரும் டி20 உலக கோப்பை தொடர்களில் நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.

அப்படி ஒரு சூழலில் இந்திய அணி டி20 உலக கோப்பை வென்றதை வாழ்த்தி தோனியும் தனது சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அவர்கள் உலக சாம்பியன்ஸ் என பாராட்டி தனது ஹார்ட் பீட் அவ்வபோது ஏறி இறங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மட்டுமில்லாமல் தன்னை போல இந்தியா மற்றும் உலகளவில் இருக்கும் அனைத்து இந்தியர்களின் சார்பாகவும் உலக கோப்பையை திரும்ப இந்தியா கொண்டு வந்ததற்கு நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.

மேலும் தோனியின் பிறந்த நாள் ஜூலை 7 ஆம் தேதி, இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற இருப்பதால் அதற்கான விலை மதிப்பில்லாத பரிசு உலக கோப்பை என்றும் கூறி தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார். பொதுவாக சமூக வலைத்தளங்களில் எந்த பதிவுகளும் வெளியிட விரும்பாத தோனி, கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்ற போது கூட ஒரு பதிவையும் பகிரவில்லை.

அப்படி இருந்தும் இந்த முறை அவர் இந்திய அணிக்காக இந்த அளவுக்கு எமோஷனல் ஆனது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

Published by
Ajith V

Recent Posts