மாலத்தீவு அதிபருக்கு வைத்த பில்லி சூனியம்.. இரண்டு அமைச்சர்கள் அதிரடி கைது..!

மாலத்தீவு அதிபருக்கு பில்லி சூனியம் வைத்ததாக இரண்டு அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலத்தீவு அரசியல் எப்போதும் பரபரப்பாக இருக்கும் என்பதும், குறிப்பாக மாலத்தீவு அதிபராக இரண்டாவது முறையாக முகமது முய்சு பதவியேற்ற நிலையில் இந்தியாவுக்கு எதிரான அவரது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்தது.

இதற்காகத்தான் பிரதமர் மோடி, இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை தடுக்க திடீரென  லட்சத்தீவுக்கு சுற்றுலா சென்றார் என்பதும் அதன் பின்னர்தான் லட்சத்தீவு ஒரு சுற்றுலா மையமாக மாறியது என்பது இதனால் மாலத்தீவில் சுற்றுலா வருமானம் வெகுவாக குறைந்தது என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மாலத்தீவு அதிபரின் அமைச்சரவையில் இருக்கும் சில அமைச்சர்களே அவருக்கு எதிராக செயல்படுவதாக கூறப்படும் நிலையில் அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சராக பதவி வகித்து வரும் ஷாம்னாஸ் சலீம் என்பவரும் அவருடைய கணவரும் அமைச்சருமான ஆதம் ரமீஸ் ஆகிய இருவரும் மாலத்தீவு அதிபருக்கு பில்லி சூனியம் வைத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்வது வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கணவன் மனைவி ஆகிய இருவரும் அமைச்சராக இருக்கும் நிலையில் இருவரும் சேர்ந்து மாலத்தீவு அதிபருக்கு பில்லி சூனியம் வைத்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இருவரும் தற்போது அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த இருவரை தவிர மேலும் இருவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நால்வரையும் ஏழு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

மாலத்தீவு அதிபருக்கு எதிரான நடவடிக்கைகளில் இரண்டு அமைச்சர்களும் ஈடுபட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை வெளிவரவில்லை என்றாலும் விசாரணையில் விரைவில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வமாக மாலத்தீவு அரசு எந்த செய்தியையும் வெளியிடவில்லை என்பதும் மாலத்தீவு ஊடகங்களில் மட்டுமே இந்த செய்தி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Bala S

Recent Posts