பிறந்த நாளில் விபரீத முடிவை எடுத்த முன்னணி நடிகை : அதிர்ச்சியில் திரையுலகம்

2023-ம் வருடம் தமிழ் திரையுலகுக்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலகுக்கே ராசியில்லாத காலம் போல. தொடர்ச்சியாக நடிகர் நடிகைகள் மற்றும் திரைக்கலைஞர்களின் மரணங்கள் ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கம் மயில்சாமி, மனோபாலா, வாணி ஜெயராம், மாரிமுத்து என பல திரை நட்சத்திரங்கள் மறைவு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது மலையாள முன்னணி நடிகையான ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் தொழில்முறை பரத நாட்டியக் கலைஞரான ரெஞ்சுஷா மேனன் கொச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். மலையாள தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம் வந்த இவருக்கு ‘ஸ்த்ரீ‘ சீரியல் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. தொடர்ந்து பல சீரியல்களில் நடித்த இவர் மல்லுவுட்டிலும் கால் பதித்தார்.  மெகா ஸ்டார் மம்மூட்டியின் ‘ஒன் வே டிக்கெட்’, ‘பாம்பே மார்ச்’, திலீப்பின் ‘மேரிக்குண்டொரு குஞ்சாடு’, ‘கார்யஸ்தான்’, லிஜோ ஜோஸ் பல்லிசேரியின் ‘சிட்டி ஆஃப் காட்’ ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்து பிரபலமானார்.

Renusa

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருப்பதுபோல சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். நேற்றைய தினம் பிறந்த நாள் அன்று தனது  வாழ்வை முடித்துக் கொண்ட சம்பவத்தால் மலையாள திரையுலகம் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளது. 35 வயதே ஆன ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு நிதி நெருக்கடியாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

எனினும் போலீசார் இவரின் தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருவனந்தபுரத்தில் தனது கணவருடன் வசித்து வந்த அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதே போல் கடந்த மாதம் நடிகை அபர்ணா நாயர் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறைவதற்குள் ரெஞ்சுஷா மேனனின் தற்கொலையும் மலையாள ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

(எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல. எனவே வாழ்வை தைரியமுடன் எதிர்த்து போராடுங்கள். தங்களுக்கு மன உளைச்சல் மற்றும் இது போன்ற எண்ணங்கள் வந்தால் அரசின் உதவி எண் 104 மற்றும் ஸ்நேகா பவுண்டேஷன் 044 -24640060 உதவியை நாடலாம்.)

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...