அதிக லாபத்துக்கு அடிபோடும் லியோ தயாரிப்பாளர்.. கடைசி வரை சிக்கலுக்கு இதுதான் காரணமா?

லலித் குமார் தயாரிப்பில் நடிகர் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் நாளை மறுநாள் ரிலீசாக உள்ள நிலையில் இன்னமும் அந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு பல திரையரங்குகளில் ஆரம்பமாகவில்லை.

இதுவரை இல்லாத அளவுக்கு நடிகர் விஜயின் லியோ படத்துக்கு இப்படியே ஏகப்பட்ட சிக்கல்கள் உருவாக காரணமே தயாரிப்பாளர் லலித் குமாரின் பேராசைதான் என்று கூறுகின்றனர்.

லலித் குமாரின் பேராசை

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனர் லலித் குமார் லியோ படத்துக்கு எந்த ஒரு புரமோஷனையும் ஆடியோ லான்ச்சையும் சரிவர செய்யாத நிலையில், கடைசி நேரம் வரை டிக்கெட் விற்பனையை கூட தடுத்து வருவதாக குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.

எப்படியாவது அதிகாலை காட்சிக்கு அனுமதி பெற்று விடலாம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் முதல் நாள் வசூலை முந்த வேண்டும் என்கிற நோக்கத்துடனும் அனைத்து ஏற்பாடுகளையும் லலித் குமார் செய்து வந்தாலும் கடைசிவரை அவரது சொதப்பல்கள் காரணமாக லியோ படத்துக்கு சரியாக வர வேண்டிய வசூல் கூட தமிழ்நாட்டில் வராது என்று திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதுவுமே சரியாக நடக்கல:

ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தியேட்டர் ஓனர்களிடம் அதிகபட்சமாக 80 சதவீதம் வரை ஷேர் கேட்டு வருவதால் தான் இன்னமும் அக்ரிமெண்ட் சைன் ஆகவில்லை என பல திரையரங்கு உரிமையாளர்கள் பளிச்சென கூறியுள்ளனர்.

காலை 7:00 மணி காட்சிக்கு கூட தமிழ்நாடு அரசு லியோ படத்துக்கு அனுமதி வழங்காத நிலையில் நாளை காலை லியோ படம் எத்தனை மணிக்கு வெளியாகும் என்பது உறுதியாகிவிடும்.

நாளை என்னவாகும்?:

பிவிஆர் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் நேற்று காலை 9:00 மணி காட்சிக்கான டிக்கெட்டுகளை தொடங்கி அனைத்தையும் விற்றுத் தீர்த்து விட்டன. இந்நிலையில் மற்ற திரையரங்குகள், இன்னமும் புக்கிங் ஆரம்பிக்காமல் இருப்பது லியோ படத்திற்கான வசூலில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் பேராசை தான் இத்தனை பிரச்சனைக்கு காரணம் என்றும் கூறுகின்றனர்.

நடிகர் விஜய் கடைசி வரை லியோ தொடர்பாக நடக்கும் அனைத்து சர்ச்சைகளையும் அமைதியாக எதிர்நோக்கி வருவது ஏன் என்கிற கேள்விகளையும் எழுப்பி உள்ளனர். லியோ படத்துக்கு எதிராக தொடர்ந்து ஏகப்பட்ட சிக்கல்கள் உருவாகி வரும் நிலையில், நாளை மதியத்துக்குள் அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும் என்று விஜய் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

ஏஜிஎஸ் சினிமாஸை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விட்டதாகவும் நாளை காலை லியோ புக்கிங் அதிகாலையிலேயே தொடங்கும் எனவும் விஜய் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews