அன்பான ரசிகர்களுக்கு நன்றி!.. இப்போ பெட்டரா இருக்கு.. விபத்துக்கு பிறகு சூர்யா போட்ட ட்வீட்!..

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று திடீரென நடைபெற்ற விபத்தில் சூர்யா மீது கேமரா மோதி விபத்து ஏற்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

நடிகர் சூர்யாவின் தோள் பட்டையின் மீது ரோப் கேமரா ஒன்று அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் தலையில் ஏதும் அடிபடாமல் தப்பித்ததே பெரிய விஷயம் என பதற வைக்கும் தகவல்கள் வெளியான நிலையில், சூர்யா எப்படி இருக்கிறார் என்றும் அவருக்கு என்ன ஆனது என்றும் அவரது ரசிகர்கள் துடித்துப் போய் சமூக வலைதளங்களில் சூர்யா சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்து வந்தனர்.

நன்றி தெரிவித்த சூர்யா:

இந்நிலையில், திடீரென மாலையில் ட்விட்டர் பக்கம் வீரப்பன் வெப்சீரிஸ் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் சூர்யாவை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் சூழ்ந்து கொண்டு நலம் விசாரிக்க ஆரம்பித்தனர். உடனடியாக தனது ரசிகர்களுக்காக புதிதாக ட்வீட் ஒன்றை பதிவிட்ட சூர்யா, “இனிய நண்பர்களே, அன்பான ரசிகர்களே, நீங்க போட்ட கெட் வெல் சூன் மெசேஜ்களுக்கு இதயம் கனிந்த நன்றி.. இப்போ பெட்டரா இருக்கு.. எப்போதும் உங்கள் அன்புக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கிய இயக்குனர் சிவா அந்த படத்தைத் தொடர்ந்து அஜித்தை வைத்து 4 படங்கள் இயக்கினாலும் இன்றும் சிறுத்தை சிவா என்றே அழைக்கப்பட்டு வருகிறார். சிறுத்தை படத்திற்கு பிறகே சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்க அக்ரீமென்ட் போடப்பட்ட நிலையில், அது தள்ளிச் சென்றுக் கொண்டே போன நிலையில், கடைசியாக கங்குவா படத்தில் லாக் செய்து பிரம்மாண்டமாக அந்த படத்தை சூர்யாவுக்காக செதுக்கி வருகிறார் சிறுத்தை சிவா.

கங்குவா மீது எதிர்பார்ப்பு:

கடைசியாக ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையிலும் சிறுத்தை சிவாவுக்கு சூர்யா வாய்ப்பு கொடுத்து கங்குவா படத்தின் மீதுள்ள நம்பிக்கையில் கடுமையான ரிஸ்க் எடுத்து புதிய தோற்றத்தில் எப்படியாவது தனது ரசிகர்களை என்டர்டெயின் செய்ய வேண்டும் என்றும் பாக்ஸ் ஆபிஸில் தானும் ஒரு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க வேண்டும் என போராடி வருகிறார்.

கங்குவா திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அடுத்த ஆண்டு சம்மரில் இந்தியன் 2, தளபதி 68 உள்ளிட்ட படங்களுடன் போட்டியிட்டால் வசூல் வேட்டை குறையும் என்றும் கூறுகின்றனர்.

suriya tweet

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews