இதெல்லாம் ஒரு படமா என எழுந்து சென்றவர்களுக்கு ஷாக் கொடுத்த என்.எஸ்.கே.. அதிரிபுதிரி ஹிட் அடித்த ரகசியம்..

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சினிமாவில் இயல்பாகவே தாராள உள்ளம் கொண்டவர். தன்னை நம்பி இருப்பவர்களுக்கு எவ்வகையிலும் குறைவில்லாமல் பார்த்துக் கொண்டவர். சினிமாவில் நடித்து பெரும்புகழையும், செல்வத்தையும் அடைந்த போதும் அதனை பொதுத் தொண்டுகளுக்காகவே செலவிட்டவர்.

தனது வாரிசுகளுக்குக் கூட அவர் சேர்த்து வைத்தது மிகச் சொற்பமே. பெரும்பாலும் காலை வேளையில் பழைய சோற்றையே ஆகாரமாக உண்டு வாழ்ந்தவர். தான் நடிக்கும் படங்கள் மற்றவர்கள் பார்க்கும் போது அது சமுதாய விழிப்புணர்வுப் படமாக இருக்க வேண்டும் என எண்ணி பல சீர்திருத்தக்கருத்துக்களை தனது படங்களில் புகுத்தியவர்.

இப்படி பல நல்ல குணநலன்களைக் கொண்ட கலைவாணர் யாரென்றே தெரியாத தயாரிப்பாளர் ஒருவருக்கு தானே முன்வந்து செய்த உதவியால் அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. 1940-களில் கலைவாணர் சினிமாவில் தியாகராஜபாகவதருக்கு அடுத்தபடியாக சூப்பர் ஸ்டாராக விளங்கிக் கொண்டிருந்த தருணம்.

அச்சமயம் பக்த நாமத்தேவர் என்ற ஒரு படம் வந்தது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆசையுடன் முதல் காட்சியை பரகான் திரையரங்கில் பார்த்துக் கொண்டிருக்கும் போது படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கியிருக்கிறார்கள். இப்படி தியேட்டரில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளியேற தயாரிப்பாளருக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக புத்தி தடுமாறி விட்டதாம்.

கருடன் படத்தில் மொரட்டு வில்லனாக மிரட்டிய நடிகர்.. அது இவர்தானா? மளமளன்னு வளர்ந்துட்டாரே..!

அந்தப் படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் நடிக்கவில்லை என்றாலும் பணம் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளருக்கு இப்படி ஒரு நிலைமையா என எண்ணி வருந்தி தான் போய் அந்தப் படத்தினைப் பார்த்திருக்கிறார்.

அப்போது என்.எஸ்.கிருஷ்ணன் இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை மாற்றி தேவையான இடங்களில் நகைச்சுவைக் காட்சிகளைச் சேர்த்து தன் சொந்த பணத்தில் செலவழித்து இயக்குநரை வைத்து படத்தை வேறுவிதமாக மாற்றித் திரையிட்டார். இந்த முறை படம் வெற்றிப் படமானது.

ஏற்கனவே படத்தின் தோல்வியால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்த தயாரிப்பாளரை அழைத்து மீண்டும் அந்தப் படத்தினைப் பார்க்க வைத்திருக்கிறார்கள். இதன்பின் அவருக்கு மீண்டும் பழைய நிலையில் உடல் நலம் தேறியிருக்கிறார். மேலும் அந்தத் தயாரிப்பாளர் கிடைத்த லாபத்தை எடுத்துக் கொண்டு என்.எஸ்.கிருஷ்ணனிடம் கொடுத்து நன்றி தெரிவித்திருக்கிறார்.

ஆனால் என்.எஸ்.கிருஷ்ணன் அதை வாங்க மறுத்து சினிமாவில் நம்பி முதலீடு செய்தவன் நொடித்துப் போகக் கூடாது. எனவே தான் இந்த உதவியை உங்களுக்குச் செய்தேன். இது உங்கள் பணம் எடுத்துச் செல்லுங்கள் என்று தாராள மனதுடன் கூறியிருக்கிறார். கலைவாணரின் இந்தச் செயலைக் கண்டு தயாரிப்பாளர் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews