அமெரிக்காவில் அடுத்தடுத்து மரணம் அடையும் இந்திய மாணவர்கள்.. தற்செயலா? திட்டமிட்டதா?

அமெரிக்காவில் அடுத்தடுத்து இந்திய மாணவ மாணவிகள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுவதும் விபத்தில் மரணம் அடைவதும் அதிகரித்து வருவது இந்திய மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களில் அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவ மாணவிகள் அதிகமான அளவில் கொலை செய்யப்பட்டு வருவதாகவும், விபத்தில் பலியாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் 16ஆம் தேதி ஜார்ஜியா பகுதியில் 25 வயது இந்திய மாணவர் விவேக் சைனி என்பவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதற்கு முன்பே 19 வயது இந்திய மாணவர் ஒருவர் நியூயார்க் நகரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதேபோல் இன்னொரு பகுதியில் 25 வயது இந்திய மாணவர் முகமது அப்துல்லா என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்திய மாணவர்கள் கொலை செய்யப்படுவது மட்டுமின்றி மர்மமான முறையில் வாகன விபத்துகளிலும் சிலர் உயிரிழந்துள்ளனர்.  கடந்த மே மாதம் மூன்று இந்திய மாணவர்கள்  விபத்தில் பலியாகினர். அதேபோல் ஜார்ஜியாவில் நடந்த கார் விபத்திலும் ஒரு மாணவர் கொல்லப்பட்டார். இருவர் படுகாயம் அடைந்தனர். நியூயார்க்கில் இந்திய மாணவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது மர்மமான முறையில் ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்தார்.

அடுத்தடுத்து இந்திய மாணவ மாணவிகள் அமெரிக்காவில் வாகன விபத்தில் உயிரிழப்பது மற்றும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ராகுல் சர்மா என்ற இந்திய மாணவர் கூறிய போது ’சில வருடங்களுக்கு முன்பு நான் இங்கே பாதுகாப்பாக இருந்ததாக உணர்ந்தேன், இப்போது எனக்கு மிகவும் அச்சமாக இருக்கிறது, நான் தினமும் நன்றாக இருக்கிறேன் என்று இந்தியாவில் இருக்கும் என் பெற்றோருக்கு தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு கூட எனது நண்பர் காரில் செல்லும் போது மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டார், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்தாலும், இந்த சம்பவம் எங்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர் கூறிய போது ’இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம், ஆனால் அதற்கு சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் உறுதி செய்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவில் வந்து நாங்கள் படித்து வருகிறோம், ஆனால் எங்களுக்கு எதிர்காலமே இல்லாத வகையில் சில சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதை பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது’ என்று வைஷ்ணவி ராவ் என்ற இந்திய மாணவி கூறியுள்ளார். உடனடியாக இது குறித்து மத்திய அரசு மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

Published by
Bala S

Recent Posts