விளையாட்டு

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனே.. 2 வருஷ பகை.. மறக்காம பாகிஸ்தானை பங்கமா செஞ்ச இந்திய ரசிகர்கள்..

பேச்சாடா பேசுன, கொஞ்சம் நஞ்சம் பேச்சா பேசுன என்பது போல் பாகிஸ்தான் ரசிகர்கள் செய்த ஒரு பழைய விஷயத்தை தோண்டி எடுத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவர்களுக்கு தக்க பதிலடியை தற்போது கொடுத்து வருகின்றனர். ஆசிய அணிகளில் சிறந்த அணியாக விளங்கும் ஒன்றுதான் பாகிஸ்தான். இவர்களும் இந்தியாவும் இணைந்து தற்போது இருதரப்பு தொடர்களில் ஆடவில்லை என்றாலும் உலக கோப்பை உள்ளிட்ட ஐசிசி தொடர்களில் இணைந்து ஆடும் பட்சத்தில் அதனை ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களும் கூர்ந்து கவனிப்பார்கள்.

இதனால் இருதரப்பு தொடர்களில் அவர்கள் இணைந்து ஆடாததால் ஒரு நாள் உலகக்கோப்பை, டி 20 உலக கோப்பை என அனைத்து தொடர்களிலும் இவர்கள் ஆடும் வகையில் அட்டவணை நிச்சயம் தயார் செய்யப்பட்டிருக்கும். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு, டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றிருந்த நிலையில் அரையிறுதியுடன் வெளியேறி இருந்தது.

மறுபுறம், பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வியடைந்து இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தது. அந்த சமயத்தில் அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்த போது, ரோஹித் ஷர்மா விமான நிலையத்தில் கிளம்புவது போன்ற ஒரு புகைப்படத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் வெளியிட்டு வைரல் ஆக்கியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பையில் லீக் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறிய போதும் அவர்கள் மீது இந்திய ரசிகர்கள் விமர்சனத்தை முன் வைத்திருந்தனர். அப்படி இருக்கையில் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் அமெரிக்கா அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததன் பெயரில் பாகிஸ்தான அணி சூப்பர் 8 வாய்ப்பை இழந்து லீக் சுற்றுடன் வெளியேறி இருந்தது.

இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்கள் தொடங்கி ரசிகர்களும் பலரும் கூட அவர்களை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். ஆனால் இந்தியா அதே குரூப்பில் இருந்து பாகிஸ்தானை வீழ்த்தியதுடன் தற்போது சூப்பர் 8 சுற்றிற்கும் முன்னேறி உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அரை இறுதியில் தோற்றதற்கு இந்தியாவை பாகிஸ்தான் ரசிகர்கள் பங்கமாக கலாய்க்க, தற்போது லீக் சுற்றுடன் அதுவும் அமெரிக்காவுக்கு எதிராக தோல்வி அடைந்து வெளியேறிய பாகிஸ்தானை அதே போன்று ஒரு புகைப்படத்தில் விமான நிலையத்தில் பாபர் அசாம் நடந்து வெளியேறுவது போன்று எடிட் செய்து இந்திய ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

இதனை பார்க்கும் பலரும் எப்போதும் இந்திய ரசிகர்களுக்கு எதிராக எதுவும் செய்யக்கூடாது என்றும் அப்படி நடந்தால் அதனை மனதில் வைத்து இது போன்று தான் பல நாட்கள் கழித்து திருப்பி செய்வார்கள் என்றும் வேடிக்கையாக குறிப்பிட்டு வருகின்றனர்.

Published by
Ajith V

Recent Posts