வேலைக்கு விண்ணப்பிக்க ரெஸ்யூம் தயார் செய்கிறீர்களா? இதை ஒரு முறை படிச்சிடுங்க…!

ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும் போது அந்த வேலைக்கு விண்ணப்பிப்போரின் தகுதியையும் திறமையையும் எடுத்து சொல்லக் கூடிய ஒரு கருவி ரெஸ்யூம். போட்டி நிறைந்த இந்த உலகில் ஒரே வேலைக்கு நூற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் கூட வரலாம். அவற்றில் தனித்து தெரிய வேண்டும் என்றால் அதற்கு சரியாக நேர்த்தியாக ரெஸ்யூமை தயார் செய்வது மிகவும் அவசியம்.

ரெஸ்யூம் தயார் செய்ய வேண்டும் என்றவுடன் உடனடியாக அருகில் உள்ள கணினி மையத்திற்கு சென்று அங்கு ஏற்கனவே இருக்கும் ஏதோ ஒரு மாடலில் தங்களுடைய தகவல்களை சேர்த்து தயார் செய்து விடுவது பலரது வாடிக்கையாக உள்ளது. எத்தனை காலம் ஆனாலும் அதே ரெஸ்யூமை வைத்து விண்ணப்பித்துக் கொண்டு இருப்போரும் உள்ளனர். இது தவறு ரெஸ்யூமை 4 மாதத்திற்கு ஒரு முறை அப்டேட் செய்வது அவசியம். ரெஸ்யூமை CV ( curriculum vitae) என்றும் அழைப்பது உண்டு.

உயர் அதிகாரி ரெஸ்யூமை வைத்தே தான் வேலைக்கு எடுக்க வேண்டிய நபரை பற்றி மிக எளிதாக கணித்து விடுவார். எனவே அந்த ரெஸ்யூமை தயார் செய்வதில் சற்று மெனக்கடலும் உழைப்பும் இருந்தால் நிச்சயம் நம்முடைய ரெஸ்யூம் உயர் அதிகாரியின் பார்வையை திருப்பும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே ரெஸ்யூம் தயார் செய்யும் பொழுது கீழ்க்கண்ட படிநிலைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

istockphoto 1383886805 612x612 1

1. ரெஸ்யூம் தயாரிப்பதில் உள்ள அடிப்படை கோட்பாடுகள்:

ரெஸ்யூம் உங்களுடைய வேலை அனுபவங்கள் பணிக்கான தகுதிகள் மற்றும் திறமைகள் உங்களின் சாதனைகள் ஆகியவற்றை பட்டியலிட்டு சுருக்கமாக எடுத்து உரைக்கும் ஒரு கருவி.

கூடுமானவரை எளிமையாகவும் சுருக்கமாகவும் இருக்க வேண்டும். ஒரே பக்கத்தில் முடித்து விட்டால் சிறப்பு.

நீங்கள் விண்ணப்பிக்க போகும் நிறுவனத்தைப் பற்றிய தகவல்களையும் வேலையின் இயல்பைப் பற்றியும் தெரிந்து கொண்டால் உங்களின் சாதனை மற்றும் திறமைகளை பட்டியலிட உபயோகமாக இருக்கும். ஆனால் எக்காரணம் கொண்டும் பொய்யான தகவல்களை உங்கள் ரெஸ்யூமில் எழுதக்கூடாது ‌‌

istockphoto 1397052984 612x612 1

2. ரெஸ்யூம் வடிவமைக்கும் முறை:

ரெஸ்யூம் நீங்கள் விண்ணப்பிக்கும் வேலைக்கு தகுந்தவாறான ஒரு லேஅவுட் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

எழுத்துருவின் அளவு 10 அல்லது 12 இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

பக்கங்களுக்கான மார்ஜின் 1″ அல்லது 1.5″ ஐந்து இருக்கலாம்.

வரிகளுக்கு இடையேயான இடைவெளி 1″ அல்லது 1.5″ விடவும்.

தலைப்புகளை போல்ட் ஆக எழுதி அதன் எழுத்துரு அளவு 14 இருக்கும் படி வைக்கவும்.

உங்களின் திறமைகள் சாதனைகள் ஆகியவற்றை பட்டியலிடும் பொழுது புல்லட் புள்ளிகளை பயன்படுத்தவும்.

3. ரெஸ்யூமில் கட்டாயம் இருக்க வேண்டிய சுய விவரங்கள்:

உங்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, நீங்கள் எந்த நகரினைச் சேர்ந்தவர், தொடர்பு கொள்ளும் எண் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

உங்களின் பெயரை எழுதுரு 14 வைத்து ஹைலைட் செய்து கொள்ளலாம்.

உங்கள் பெயருக்கு கீழே உங்களின் வேலை சம்பந்தப்பட்ட தகுதியையும் எழுதிக் கொள்ளலாம்.

தொடர்புக்கு கொடுக்கப்படும் மின்னஞ்சல் முகவரி ஆனது வேலைக்கு விண்ணப்பிக்க தகுந்தாற்போல் இருக்க வேண்டும். (Stellacutiepie , Ruggedboyrocky, Thunderdhanabal இப்படி ஏதும் இல்லாமல் உங்கள் பெயரை ஹைலைட் செய்யும் விதமாக இருந்தால் போதும்).

வேலை சம்பந்தப்பட்ட சமூக வலைத்தள அக்கவுண்ட் கணக்குகளையும் இணைத்துக் கொள்ளலாம். அதில் நீங்கள் செய்த வேலைகளைப் பற்றிய அப்டேட் இருத்தல் நலம்.

உங்களுக்கு என்று உங்கள் வேலைகளை பற்றிய தகவல்கள் அடங்கிய போர்ட் போலியோ அல்லது வலைத்தளங்கள் இருந்தால் அதன் இணைப்பை இணைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் இருக்கும் நகரத்தையும் மாநிலத்தையும் மட்டும் குறிப்பிட்டால் மட்டுமே போதும் கதவு எண், தெரு பெயர் போன்றவை எதிர்பார்க்கப்படுவதில்லை. தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி எண்ணும், மின்னஞ்சலும் போதுமானது.

istockphoto 1403971915 612x612 1

4. ரெஸ்யூமில் கவனிக்கப்பட வேண்டிய நோக்கம் (objective):

ரெஸ்யூமில் நோக்கம் எழுதும் பொழுது உங்களுக்கு அந்த வேலை சம்பந்தமாக உள்ள அனுபவம், திறமைகள் ஆகியவற்றை சுருக்கமாக இரண்டு முதல் மூன்று வரிகளுக்குள் எழுதுவது நல்லது.

5. ரெஸ்யூமில் வேலை அனுபவம் மற்றும் சாதனைகள்:

ரெஸ்யூமின் உங்கள் முந்தைய வேலையை பற்றிய குறிப்புகளும் அதில் உங்களின் சாதனைகளைப் பற்றியும் எழுத வேண்டும்.

  • பதவியின் பெயர்
  • நிறுவனத்தின் பெயர்
  • வேலைக்கு சேர்ந்த தேதி வேலையில் இருந்து விலகிய தேதி

தேவைப்பட்டால் நிறுவனம் உள்ள இருப்பிடம் ஆகியவற்றை வரிசையாக குறிப்பிட வேண்டும்.

அதன் கீழ் அந்த வேலையில் நீங்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டு குறிப்பிடலாம். உதாரணமாக நீங்கள் ஒரு நிறுவனத்தின் குழுவின் தலைவராக (டீம் லீடர்) இருந்தீர்கள் என்றால் வெறும் குழுத்தலைவர் என்று பதவியின் பெயரை மட்டும் எழுதாமல் அந்த குழுவிற்காக, நிறுவனத்திற்காக நீங்கள் என்னென்ன சாதனைகள் செய்தீர்கள் என்பதையும் எழுத வேண்டும்)

6. கல்வித் தகுதிகள் மற்றும் சான்றிதழ்கள்:

உங்களின் கல்வித் தகுதிகள் மற்றும் நீங்கள் பெற்ற சான்றிதழ்களை வரிசையாக குறிப்பிடவும் எப்பொழுதும் உங்களின் மேற்படிப்பில் இருந்து படிப்படியாக கீழ்நோக்கி வரவும்.

உங்களின் பட்டம், பட்டம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகம், தேர்ச்சி பெற்ற ஆண்டு, தேர்ச்சி சதவீதம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடவும். (விருப்பப்பட்டால் மட்டுமே தேர்ச்சி சதவீதத்தை எழுதலாம். பெரும்பாலான நிறுவனங்கள் தேர்ச்சி சதவீதம் மற்றும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு சம்பந்தப்பட்ட விவரங்களை எதிர்பார்ப்பதில்லை).

istockphoto 1397052978 612x612 1

7. திறன்கள்:

நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய இடம் இதுதான் வேலை சம்பந்தமாக உங்களுக்கு இருக்கும் திறன்களை தெளிவாக பட்டியலிட்டு கூறுங்கள். திறன்களின் அடிப்படையிலேயே பல உயர் அதிகாரிகள் வேலைக்கு ஆட்களை நியமனம் செய்கின்றனர்.

8. ரெஸ்யூமில் இணைக்க வேண்டிய உங்களின் விருப்பங்கள்:

உங்களின் ஆர்வங்கள் தனிப்பட்ட ப்ராஜெக்ட்கள், கலந்தாய்வுகள் போன்றவை இருந்தால் அவற்றையும்  குறிப்பிட்டுக் கொள்ளுங்கள்.

உங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றையும் ரெஸ்யூமில் இணைக்கலாம். இணைக்க கூடிய புகைப்படமானது ப்ரொபஷனல் ஆக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

ரெஸ்யூமை முழுவதுமாக தயார் செய்த பிறகு அதை ஒரு முறைக்கு பலமுறை திருப்பி பார்க்கவும் வேறு யாரிடமாவது கொடுத்து அவர்களின் கருத்துக்களையும் பரிசீலனை செய்யலாம். எழுத்துப் பிழை இலக்கண பிழை இல்லாதிருத்தல் அவசியம். ரெஸ்யூமோடு வேலைக்கு தகுந்தாற்போல் ஒரு சிறந்த உறை கடிதத்தையும் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இணைய வாயிலாக அனுப்பும் பொழுது pdf வடிவில் அனுப்பவும். அவ்வபோது சரி பார்த்து அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews