செய்திகள்

தமிழ்நாட்டில் கட்டிடம் கட்டுவோருக்கு நல்ல செய்தி.. தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை தெரியுமா?

சென்னை: தமிழ்நாட்டில் 300 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் வணிக கட்டிடம் முடிவு சான்றிதழ் பெற விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் முத்துசாமி பேசுகையில், 300 சதுர மீட்டருக்குள் கட்டிட பரப்பளவு கொண்ட 14 மீட்டர் உயரத்திற்குள் உள்ள அனைத்து வணிக கட்டிடங்களுக்கும் கட்டிட முடிவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார். தற்போது அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.

தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019-ல் அனைத்து வகையான வணிகக் கட்டிடங்களும் கட்டிட முடிவு சான்றிதழ் கட்டாயமாக பெறப்பட வேண்டும் என்ற நிலை உள்ளது.

இதனால் சிறு வணிகர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானதால், சிறு வணிகர்களின் நலன் கருதி சட்டசபையில் கடந்த 21-ந் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டபடி சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையில் 300 சதுர மீட்டர் மொத்த கட்டிட பரப்பளவிற்குள் 14 மீட்டர் உயரத்திற்குள் அமையும் வணிகக் கட்டிடங்களுக்கு, கட்டிட முடிவுச் சான்றிதழ் பெறுவதிலிருந்து விலக்கு அளித்து அரசு ஆணையிட்டுள்ளது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் தமிழ்நாட்டில் 300 சதுர மீட்டருக்கு மேல் கட்டப்படும் வணிக கட்டிடம் முடிவு சான்றிதழ் பெற என்ன மாதிரியான விதிமுறைகள் என்பதையும் பார்ப்போம்.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளின்படி, கட்டிடப் பணி முடிப்பு சான்று பெற விரும்பும் விண்ணப்பதாரர் அல்லது உரிமையாளர் அல்லது பொது அதிகாரம் பெற்றவர் அல்லது பதிவு பெற்ற அபிவிருத்தியாளர் மற்றும் யாராக இருந்தாலும், கட்டிடப் பணி முடிவு சான்றுக்கான விண்ணப்பத்தை உரிய படிவங்களில் சமர்ப்பித்தாக வேண்டும்.

குறிப்பாக அக்கட்டிடத்துக்கு தேவையான மின் இணைப்பு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெறும் முன்னதாகவே தங்கள் கட்டுமானத்துக்கு திட்ட அனுமதி வழங்கிய அதிகாரியிடம் இருந்து முடிவு சான்றை பெற்றுக் கொள்ள வேண்டும். கட்டிட முடிவு சான்றை வழங்கும் பட்சத்தில் மட்டுமே, மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகங்கள் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Keerthana

Recent Posts