பக்தனை காப்பாற்ற தூணை பிளந்து வந்த நரசிம்மர் – நரசிம்மர் ஜெயந்தி

14123ef74d38618926db65c36e2ce14e

எங்கெல்லாம் தீமைகள் உருவாகிறதோ! அங்கெல்லாம் நான் தோன்றுவேன்னு மகாவிஷ்ணு சொல்லி இருக்கிறார். அவ்வாறு உருவானதே, வாமண, கிருஷ்ணர், ராமர், வராகம், கூர்ம அவதாரமெல்லாம். இப்படி பகவான் எடுத்த அவதாரங்களில் மிக முக்கியமான 10 அவதாரங்களாய் சொல்லப்படுது. அவற்றிற்கு தசாவதாரம் எனப்பெயர். மற்ற அவதாரமெல்லாம், தீயவைகளை அழிக்க, பிறப்பெடுத்து, வளர்ந்து தக்க தருணத்திற்காக காத்திருந்து தீயவைகளை அழித்தன. ஆனால் நரசிம்ம அவதாரமோ, பக்தனின் குரலை கேட்ட மாத்திரத்தில் உருவாகி தீயவையை அழித்தது. கால அளவில் மற்ற அவதாரங்களில் சிறியதும்கூட…

கூப்பிட்ட குரலுக்கு விஷ்ணு பகவான் ஓடிவரும் அளவுக்கு பிரகலாதன் எப்படி முக்கியமானவன் ஆனான் என பார்க்கலாம்!! இப்பிறவியில்  சிறந்த பக்தனான பிரகலாதன், முற்பிறவியில்  கயவனாக, கள்வனாக,   மக்களுக்கு துன்பங்கள் கொடுக்கும் மகாபாவியாக இருந்தான். அப்போது அவன் பெயர்  சுவேதன். அவன் தன் இறுதிக்காலத்தில்  தவறுகளை எண்ணி வருந்தி, தன்னை  மன்னித்தருளுமாறு மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்தான். தனக்கு எந்த வடிவிலாவது காட்சி தந்து அருளுமாறு  வேண்டினான். ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஜெபித்துக் கொண்டேயிருந்தான். அப்போது ஓர் அசரீரி வாக்கு ஒலித்தது.  இந்தப் பிறவியில் நீ  என்னை தரிசிக்க இயலாது.  உன் அடுத்த பிறவியில் நீ அழைத்ததும் வருவேன் என்று ஒலித்தது. குரல் வந்த திசை நோக்கி கைகூப்பிய வண்ணம் உயிர்விட்டான் சுவேதன். அந்த சுவேதன்தான் இந்த பிறவியில், விஷ்ணுவை பரம எதிரியாக நினைக்கும் இரண்யகசிபுவுக்கு, விஷ்ணு பக்தனாக, மகனாக பிரகலாதனாக பிறந்தான்.

யார் இந்த இரண்ய கசிபு?!

மகாவிஷ்ணுவின் அந்தப்புர காவலர்களாக விஜயன், ஜெயன் என இருவர் இருந்தனர். ஒருநாள் மகாலட்சுமியிடம் தனித்து சில ரகசியம் சொல்லவேண்டி இருந்ததால், வாயிற்காப்பாளர்களை அழைத்து, யாரையும் அந்தப்புரத்திற்குள் அனுமதிக்காதீர்கள் என சொல்லிவிட்டு சென்றார். அந்த சமயம் பார்த்து, முனிவர்கள் சிலர் பகவானை தரிசிக்க அங்கு வந்தனர். உள்ளே அனுமதிக்க முடியாது என வாயிற்காப்பாளர்கள் மறுக்க, விஷ்ணுவை பிரிந்து, பூலோகத்தில் பிறக்க கடவது என சாபமிட்டனர். ஜெயனும், விஜயனும் கலங்கி நின்றனர்.

இதையறிந்து மகாவிஷ்ணு அங்கே வந்தார். முனிவர்கள், மகாவிஷ்ணுவை வணங்கி நடந்ததைக் கூறினர். முனிவர்களின் சாபத்தை ஜயனும் விஜயனும் அனுபவித்தே ஆகவேண்டும். இருந்தாலும்  அவ்விருவரும் தங்கள் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்கவே,  அவர்களுக்கு இரங்கிய  பகவான், துவாரபாலகர்களே! என்னைப் போற்றி வழிபட்டு பன்னிரண்டு பிறவிகள்  பூலோகத்தில் வாழ்ந்து அதன்பின் வைகுண்டம்  திரும்பிவர விருப்பமா? அல்லது  பூலோகத்தில் மூன்று  பிறவிகள் எடுத்து என்னை நிந்தித்து வைகுண்டம் திரும்பிவர விருப்பமா? என்று கேட்டார்.  பகவானே!  தங்களைப் பிரிந்து பூலோகத்தில் பன்னிரண்டு பிறவிகள் இருக்கமுடியாது.  உங்களை நிந்தனை செய்தாலும் பரவாயில்லை. மூன்று பிறவிகள் போதும். தங்கள்   திருக்கரங்களால் வதமாகி வைகுண்டம் வரவிரும்புகிறோம் என்றனர். மகா விஷ்ணுவும்  அருளினார்.

இந்த நிலையில் பூவுலகில் பிரஜாதிபதி என்னும் முனிவர் மாலை நேர பூஜை செய்து கொண்டிருந்தார். அச்சமயம் அவரது மனைவி திதி அவரைக் கட்டித்  தழுவினாள். அதன்விளைவால் அவர்களுக்கு இரண்டு அசுர குணம்கொண்ட மக்கள் பிறந்தார்கள். அவர்களே  இரண்யாட்சன், இரண்ய கசிபு என்ற இரணியன்.  பிறக்கும்போதே அவர்கள் கரிய நிறமும்  முரட்டு குணம் கொண்டவர்களாகவும் திகழ்ந்தார்கள். அவர்கள் வளரவளர தேவர்கள்  அஞ்சினர். இந்த இருவரும்  கடுந்தவம் புரிந்து அரிய வரங்களைப் பெற்றார்கள். ஒரு சமயம் இரண்யாட்சன், பூமாதேவியை கவர்ந்து பாதாள லோகத்தில் கொண்டு சென்று மறைத்து வைத்தான். விஷ்ணு வராக(பன்றி) அவதாரமெடுத்து,  பாதாள லோகம் சென்று இரண்யாட்சனை வதம் செய்து பூமாதேவியை மீட்டு கொண்டு வந்தார். பூமாதேவிக்கும், விஷ்ணுக்கும் நரகாசூரன் பிறந்தான்.

6dcdefac245b8d1d6c3f1d57469f0679

இரண்யாட்சன் வதம் செய்யப்பட்டதை அறிந்து இரணியகசிபு மகாவிஷ்ணுமீது  கடுங்கோபம் கொண்டு, அவரை அழிக்க எண்ணி, அதற்கான பலம்பெற சிவனை நோக்கி தவம் செய்வதற்காக மந்தாரமலையின் குகையினுள் புகுந்து கொண்டான்.  அப்போது, அவன் மனைவி லீலாவதி கர்ப்பவதியாக இருந்தாள்.  இதுதான்  தக்கசமயமென்று நராத முனிவர் இரணியகசிபுவின் அரண்மனைக்கு வந்தார். அப்போது  லீலாவதி மஞ்சத்தில் படுத்து  உறங்கிக் கொண்டிருந்தாள்.  உடனே நாரதர்  கர்ப்பத்திலிருக்கும் சிசுவுக்கு  விஷ்ணு உபதேசம் செய்தார். ஸ்ரீமன் நாராயணன் தான் ஈரேழு உலகத்திற்கும் அதிபதி என்றும்,  ஓம்  நமோ நாராயணாய எனும் மகாவிஷ்ணுவின் மூல மந்திரத்தையும் உபதேசித்தார். தாயின்  கர்ப்பத்திலிருந்த குழந்தை நாரதரின் உபதேசத்தை உன்னிப்பாகக்  கேட்டதுடன், அப்பொழுதே ஓம் நமோ நாராயணாய என்று முணுமுணுக்க ஆரம்பித்தது. இரணியனின் மனைவி  லீலாவதி  அழகிய பிரகலநாதனை பிரசவித்தாள்.

7bea4d25abc491fe29fa97acab6fdb81

மனிதனுமல்லாத மிருகமுமல்லாத உயிரினத்தால், உள்ளேயுமல்லாமல், வெளியேயுமல்லாத இடத்தில், ஆகாயமுமல்லாத பூமியுமில்லாத வெளியில், இரவுமில்லாத பகலுமல்லாத வேளையில், எந்தவித ஆயுதத்தாலின்றி ஒரு சொட்டு ரத்தமும் கீழே சிந்தாத வகையில் தனக்கு மரணம் நிகழவேண்டுமென சிவனிடம் வரம்பெற்று அரண்மனைக்கு திரும்பி, அனைவரும் தன்னையே கடவுளாய் வணங்கவேண்டுமென கட்டளையிட்டான். மீறியவர்களை கடுமையாய் துன்புறுத்தவும் செய்தான். 

வருடங்கள் கடந்தன.  பிரகலாதன் அசுரக்குலத்தில் பிறந்தாலும் ஓம் நமோ நாராயணாய என்று  எட்டெழுத்து மந்திரத்தை எப்போதும் ஜெபித்துக் கொண்டிருந்தான். இதனைக்கண்ட   இரணியன், அந்தப் பெயரை உச்சரிக்காதே. இந்த உலகங்கள் அனைத்திற்கும் நானே அதிபதி. என் பெயரைச் சொல். இரண்யாய நமஹ என்று சொல் என்று  கட்டாயப்படுத்தினான். ஆனால் பிரகலாதனோ மகா விஷ்ணுவே தெய்வம் என்பதில் உறுதியாக இருந்தான். எத்தகைய  அச்சுறுத்தலுக்கும் தண்டனைக்கும் அவன்  அஞ்சவில்லை. வெறுத்துப்போன இரணியன் தன் தங்கை ஹோலிகாவை அழைத்து, இவனை நெருப்பு வளையத்திற்குள் அழைத்துச் சென்று பஸ்பமாக்கிவிடு  என்று உத்தரவிட்டான்.இந்த ஹோலிகா நெருப்பால் பாதிக்கப்படாத வரம் பெற்றவள். அவள் அண்ணன் சொல்படி பயங்கரமாக எரிந்து கொண்டிருந்த நெருப்பு வளையத்திற்குள்  பிரகலாதனை அழைத்துச் சென்றாள். அப்போதும் பிரகலாதன் கைகளைக் கூப்பிக் கொண்டு ‘ஓம் நமோ நாராயணாய’ என்று ஜெபித்துக் கொண்டே சென்றான். ஆனால்,  தீய  எண்ணத்துடன் நெருப்பு வளையத்திற்குள் நுழைந்த ஹோலிகா பஸ்பமானாள். நாராயணன் திருநாமத்தை ஜெபித்துக்கொண்டே சென்ற பிரகலாதன் பொலிவுடன் வெளிவந்தான்.  இரணியனின் கோபம் எல்லை கடந்தது. அவன் பிரகலாதனிடம், உன் நாராயணன் எங்கே? அவனைக் காட்டு என பிரகலனாதனை கண்டித்தான்.  ஸ்ரீமன் நாராயணன் தூணிலும்  துரும்பிலும் உள்ளான் என பிரகலனாதன் சொன்னதும், ஆக்ரோஷமாய் அருகிலிருந்த தூணில் பலம்கொண்டு தன்கதையால்  தாக்கினான். 

f0fac9b551aff883749292b48bff7e78

இரண்யகசிபுவுக்கும் பிரகலனாதனுக்கும் வாக்குவாதம் நடந்தது பிரதோஷ காலம் முடியும் நேரம். இரவும் பகலும் இல்லாத வேளை.  மனிதனுமில்லாத, மிருகமுமில்லாத மனித உடலும், சிங்கமுகமாக நரசிம்மராக அந்தத் தூணிலிருந்து வெளிவந்தார். இரணியன் பெற்ற வரத்தினை அறிந்த  நரசிம்மர் அந்தப் பிரதோஷ வேளையில் அறைக்கு உள்ளேயும் வெளியேயும் இல்லாமல் வாசல்படியில்,  ஆகாயத்திலும் பூமியிலும் இல்லாமல் தம் மடியின்மீது படுக்கவைத்து, ஆயுதத்தால்  கொல்லாமல் தன் கூர்மையான கைகளின் நகங்களால், அவன் மார்பினைப் பிளந்து,   ரத்தத்துளிகள் கீழே சிந்தாதவாறு ரத்தத்தினை உறிஞ்சி, குடலை உருவி மாலையாகப் போட்டுக்கொண்டு இரணியனை சம்ஹாரம் செய்தார்.
இரண்யகசிபு வதம் முடிந்தும் தன் ஆக்ரோஷம் குறையாமலிருந்த நரசிம்மரை நெருங்க அனைவரும் பயந்திருந்த வேளையில், பிரகலாதன் நெருங்கி, பாடல்பாடி அவரின் ஆக்ரோஷம் தனித்தான். தன் எதிரே சிங்கமுகத்துடனும் மனித உடலுடனும் காட்சிதந்த நரசிம்மமூர்த்தியை கைகூப்பி வணங்கினான். அப்போது, அவனுக்கு தன் முற்பிறவி நினைவுக்கு வந்தது. பகவானே, கடந்த பிறவியில் நான்  வேண்டிக்கொண்டதன் பயனால் இப்பிறவியில் எனக்காக நரசிம்ம அவதாரம் எடுத்து  அருள்புரிந்தீர் என்று தாள்பணிந்தான்  பிரகலாதன்.

e9295459f08160d6888518fba74f28d7

கருணைக்கடலான நரசிம்ம மூர்த்தி பிரகலநாதனை தன் மடியில் இருத்தி,   ”நீ ஏன் தூணைக் காட்டினாய், துரும்பைக் காட்டியிருக்கக் கூடாதா? என்று பிரகலநாதனிடம் கேட்க,  ”ஏன் இப்படி கேட்கிறீர்கள்? என்று பிரகலாதன் கேட்க, தூண்  என்பதால், இரணியன் அதை உடைக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. துரும்பு என்றால் அதைக் கிள்ளியெறிந்தவுடன் பிரசன்னமாகி இருப்பேனே!  இவ்வளவு நேரம் கடந்திருக்காதில்லையா?! நீயும் அவஸ்தை பட்டிருக்க மாட்டயல்லவா?! என்றாராம். ஆம்!  நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை. அவரிடம்  வைக்கும் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறும்.  கேட்ட வரத்தை கேட்ட மாத்திரத்திலேயே அளிக்க வல்லவன் இந்த நரசிம்மர்.

நரசிம்மர் விரத வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்திசாயும் வேளையான மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை. நாளை (17/5/2019)நரசிம்ம ஜெயந்தி, சித்திரை மாதவளர்பிறை சதுர்த்தசி திதியில்  நரசிம்ம ஜெயந்தி வரும். அன்றைய தினம் விரதமிருந்து இந்த நேரத்தில் நரசிம்மரை வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். 

நரசிம்ம மூல மந்திரம்..

‘ஓம் வஜ்ரநாகாய வித்மஹே

தீட்சண தன்ஷ்ட்ராய தீமஹி

தந்நோ நரஸிம்ஹாய ப்ரசோதயாத்’

எதிரி பயம் நீங்க, இனம்புரியா அச்சம், குழப்பம் விலக, ராஜ வாழ்க்கை கிட்ட, தொழிலில் தடை விலக நரசிம்மரை வழிபடுவோம்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.