லியோ படத்துக்கு 6 மணிக்கு ஸ்பெஷல் ஷோவா? தயவு காட்டியதா தமிழக அரசு.. பரபரக்கும் தகவல்கள்..!

நடிகர் விஜய் நடிப்பில்உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகிறது. இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், இன்னும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திரையரங்குகள் டிக்கெட் புக்கிங்கை ஆரம்பிக்காமல் உள்ளன. மேலும், அதிகாலை சிறப்பு காட்சிக்கான அனுமதி கேட்டு அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளது.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி அந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளார். இந்நிலையில், தற்போது லியோ படத்துக்கு அதிகாலை 6:00 மணிக்கு சிறப்பு காட்சிக்கான அனுமதி அளிக்க தமிழ்நாடு அரசு முன் வந்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் சில தகவல்கள் அடிபட்டு வருகின்றன.

சிறப்பு காட்சிக்கு அரசு பரிசீலனை?

படம் வெளியாகும் 19-ஆம் தேதி மட்டும் அதிகாலை 4:00 மணிக்கு பதிலாக 6:00 மணிக்கு முதல் காட்சியும், அடுத்த 4 நாட்களுக்கு காலை 7:00 மணி முதல் ஃபர்ஸ்ட் ஷோ ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய் தரப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனம் எப்படியாவது நீதிமன்றத்தின் மூலமாக தங்களுக்கான உரிமையைப் பெற்று விடலாம் என்கிற உறுதியுடன் இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு இப்படி ஒரு நிபந்தனையுடன் சிறப்பு காட்சியை வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.

ஆனால், நாளை இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு தான் லியோ படத்தின் ரிலீஸ் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை தீர்ப்பு:

லியோ படத்திற்கு ஆடியோ லான்ச் நடத்துவதற்கும் அனுமதி கிடைக்காத நிலையில், தற்போது படத்தின் ரிலீசை முன்னிட்டு மற்ற மாநிலங்களில் அதிகாலை 4:00 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு வரும் நிலையில், தமிழ் திரைப்படமான லியோ வுக்கு தமிழ்நாட்டிலேயே சிறப்புக்காட்சி மறுக்கப்படுவது சரியான அணுகுமுறை இல்லை என லியோ படக்குழுவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சினிமா பிரபலங்களும், லியோ படத்திற்கு மட்டுமின்றி மற்ற பெரிய படங்களுக்கும் சிறப்பு காட்சிகளுக்கான அனுமதியையும் அதற்கு உரிய பாதுகாப்பையும் அரசு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன் வைத்துள்ளனர்.

ஏகப்பட்ட சிக்கல்:

இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் விஜயின் லியோ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் விற்கப்படுவது தெரிய வந்தால் அரசு கடும் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்கிற எச்சரிக்கையையும் விடுத்து புகார் அளிக்க சில மாவட்டங்களில் அவசர எண்களையும் அறிவித்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1077 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திரும்புற இடமெல்லாம் ஏகப்பட்ட சிக்கல் நிலவி வரும் நிலையில், லியோ திரைப்படம் திட்டமிட்ட தேதியில் சுமூகமாக ரிலீஸ் ஆகுமா? என்கிற கேள்வியும், ரிலீஸ் ஆனால் என்ன என்ன சர்ச்சைகள் வெடிக்கும் என ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பியுள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews