50 அடிச்சது மட்டுமில்ல.. முதல் சிஎஸ்கே வீரரா மிட்செல் செஞ்ச இந்த சாதனைய கவனிச்சீங்களா..

நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடந்த மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சில முக்கியமான வீரர்களை எடுத்திருந்தது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ரச்சின் ரவீந்திரா, முஸ்தாபிசுர் ரஹ்மான், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி உள்ளிட்ட வீரர்களையும் அவர்கள் தேர்வு செய்திருந்தனர். கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் மிட்செல் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் நியூசிலாந்து அணிக்காக பெரிய பங்களிப்பை அளித்திருந்தனர்.

இதனால் சென்னை அணியில் அவர்கள் இணைந்த பின்னர், ஐபிஎல் தொடரிலும் அவர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கருதப்பட்டது. இதில் முதல் சில போட்டிகளில் அதிரடியாக ஆடிய ரவீந்திராவால் தொடர்ந்து அதனை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. இதன் பெயரில் ஆடும் லெவனில் அவரது இடமும் பறிபோனது.

இன்னொரு பக்கம், சமீர் ரிஸ்வி ஒரு சில போட்டிகளில் மட்டுமே பேட்டிங் செய்ய வந்திருந்தாலும், அவருக்கும் நிரந்தர வாய்ப்பு அணியில் கிடைக்கவில்லை. அப்படி இருக்கையில், 8 போட்டிகளிலும் தொடர்ந்து ஆடி இருந்த டேரில் மிட்செல், டி 20 போட்டியில் ஒரு நாள் போட்டியை போல பந்துக்கு பந்து ரன் சேர்த்து ஆடி வந்தார்.

இதனால் அவருக்கு பதிலாக வேறு வீரர்களை அணியில் இடம்பெற செய்ய வேண்டும் என்றும் சிஎஸ்கே ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் வந்தனர். அப்படி இருக்கையில் தான், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார் டேரில் மிட்செல். இந்த போட்டியில் 32 பந்துகள் சந்தித்த மிட்செல் ஏழு ஃபோர்கள் மற்றும் ஒரு சிக்ஸருடன் மொத்தம் 52 ரன்கள் எடுத்திருந்தார்.

அவரது கம்பேக் ஆட்டம், நிச்சயம் இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து சென்னை அணிக்கு பெரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மிக முக்கியமான சாதனையை ஐபிஎல் சரித்திரத்திலேயே இரண்டாவது வீரராக செய்துள்ளார் டேரல் மிட்செல். ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஹெட், அபிஷேக் ஷர்மா, கிளாஸன், சபாஷ் அகமது மற்றும் பேட் கம்மின்ஸ் என ஐந்து பேரின் கேட்சினை மிட்செல் தான் எடுத்திருந்தார்.

இதற்கு முன்பாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடி இருந்த முகமது நபி தான் ஒரே போட்டியில் ஐந்து கேட்ச்கள் எடுத்த ஒரே வீரர் ஆவார். அவருக்கு அடுத்தபடியாக, ஐந்து கேட்ச்களை ஒரே போட்டியில் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சிறப்பை டேரில் மிட்செல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...