சகல சௌபாக்கியங்களை அள்ளி தரும் வரலட்சுமி விரதம்!

இந்த விளம்பி வருடத்தில் ஆவணி மாதத்தில், அதாவது ஆகஸ்ட் 24-ம் தேதி பௌர்ணமி முந்திய நாளில் வருகின்ற தினமே வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிப்பர்.பொதுவாகவே ஆடி மாதத்தில் வளர்பிறையில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சில வருடங்கள் ஆவணி மாதத்திலும் வரலட்சுமி விரத நாள் வரும். வரலட்சுமி விரதம் முதன்மை வாய்ந்தது.

இந்த விரதத்தை மேற்கொண்டால் எட்டு விதமான ஐஸ்வரியங்களும் உண்டாகும். இந்த விரதம் செல்வ வளம் மட்டும் அல்லாமல் உடல் நலம், மாங்கல்ய பலம், குழந்தை பேறு, நீண்ட ஆயுள், ஞானம், தைரியம் மற்றும் எல்லா வகையான வரங்களை வாரி வழங்கக்கூடியது. வரலட்சுமி நோன்பினை எப்படி நோற்பது என்பதை விரிவாக இந்த பதிவில் காணலாம்.

வரலட்சுமி நோன்பு நோற்பதற்கான வழிமுறைகள்:

அதிகாலையில் வீட்டை பெருக்கி, ஈரத்துணியால் சுத்தம் செய்து கொள்ளுங்கள். குளித்த பிறகு, வாசலில் மாவிலை தோரணங்களை கட்ட வேண்டும். பூஜை அறையில் மேற்கு பார்த்த படி அல்லது கிழக்கு பார்த்த படியே தரையில் ஒரு கோலம் போட்டு கொள்ளுங்கள். அந்த கோலத்தின் மேல் ஒரு பலகை வைத்து, அதன் மேலே ஒரு கோலம் போட்டு  கொள்ளுங்கள். கலசம் ஒன்று எடுத்து அதை சுற்றி மஞ்சள் தடவி வைத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சரிசி, 9  காசுகள், கருகமணி, வளையல், சின்ன கண்ணாடி, சீப்பு, எலுமிச்சை பழம், குங்குமம் நிறைந்த குங்குமச்சிமிழ் இவற்றை போட்டுக்  கொள்ளுங்கள்.

இந்த கலசத்தில் உள்ளே போடப்படும் பொருட்கள் அவரவர்களின் வீட்டின் வழக்கப்படி மாறுபடும். ஒரு சில இல்லத்தில் துவரம் பருப்பும் அரசியும் கால் பாகம் வருகிற மாதிரி போடுவார்கள். அதன்பிறகு உள்ளே போடும் பொருட்களின் எண்ணிக்கை கூட மாறுபடும்.  சிலர் கலசத்தை வைப்பதை வியாழக்கிழமை அன்றே ஆரம்பித்து விடுவார்கள்.

அவரவர்களின் குடும்ப சம்பிரதாயப்படி வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளலாம். கலசத்தின் மேல் மாவிலை சுற்றி சொருகி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு தேங்காய் எடுத்து அதை சுற்றி மஞ்சள் பூசி, ஐந்து முகமாக குங்குமம் வைத்து மாவிலை கொத்துகள் நடுவே வைத்து விடுங்கள்.

பட்டு ஆடையால் அலங்கரித்து வெள்ளி, தங்கம் அல்லது பஞ்சலோகத்தில் ஆன லட்சுமியின் உருவ சிலையை தேங்காயில் பதித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மஞ்சள் சரடு எடுத்து அதில் ஒரு மஞ்சள் கிழங்கை கட்டி, கலசத்தின் கழுத்தில் கட்டி விடுங்கள். அதன் பிறகு பூமாலைகள், வாசனை உள்ள பூக்கள், அணிகலன்கள், ஜடை மற்றும் வளையல்கள் வைத்து அலங்கரிக்கலாம். இந்த கலசத்தில்தான் மகாலட்சுமி எழுத்தருளியிருப்பதாக ஐதீகம்.

கலசத்தை அலங்கரித்த பிறகு, விளக்கேற்றி, தூபம், கற்பூரம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். மஹாலட்சுமியின் மந்திரங்கள், அஷ்டலக்ஷ்மியின் ஸ்தோத்ரம் அல்லது லலிதா சகஸ்ரநாமத்தை சொல்லி பூஜிக்க வேண்டும். நெய்வேத்தியமாக பால், பழங்கள், பலகாரங்கள் அல்லது ஏதேனும் ஒரு இனிப்பு வகையை படைக்க வேண்டும்.

கலசத்துடன் வைத்த  மஞ்சள் சரடை வீட்டில் இருக்கும் சுமங்கலி பெண்கள் தங்களது வலது கையில் கட்டி கொள்ளலாம். அன்றைய தினத்தில் வீட்டில் வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமம், தாம்பூலம், ரவிக்கை துண்டு, மஞ்சள், வளையல்கள் போன்றவற்றை அளித்து ஆசி பெறுவது நலம் தரும். அவரவரின் வசதிக்கேற்ப வீட்டில் வரும் சுமங்கலி பெண்களுக்கு ஏதேனும் கொடுக்கலாம்.

இந்த விரதத்தை கடைபிடித்தால் முற்பிறவியில் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கும். கன்னி பெண்களுக்கு விரைவில் திருமணம் பாக்கியம் கிட்டும். இந்நோன்பை மேற்கொள்பவர்களுக்கு சகல விதமான ஐஸ்வரியங்களும் கிட்டும். ஸ்ரீ மகாலக்ஷ்மியை மனதார வணங்கினால் வேண்டிய வரத்தை அள்ளி தருவாள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews