நான் பேசமாட்டேன்.. என் ஸ்பின் பேசும்.. டி 20 கிரிக்கெட்டில் எந்த இந்திய வீரரும் தொடாத இடத்தை தட்டித் தூக்கிய சாஹல்..

டி 20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சில வீரர்கள் தேர்வு செய்யப்படாமல் போனது அதிக விமர்சனத்தை சந்தித்திருந்தாலும் சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, சாஹல் உள்ளிட்டோர் தேர்வானது அதிக வரவேற்பை பெற்று தான் வருகிறது.

மேலும், அணியில் சில குறைகள் இருந்தாலும் ஆடும் எதிரணியை பொறுத்து ஆடும் லெவனை தேர்வு செய்து இந்திய அணி களமிறங்கினால் நிச்சயம் இந்த முறை டி 20 உலக கோப்பையை 2 வது முறையாக தட்டித் தூக்கி விடலாம் என்று தான் தெரிகிறது.

ரோஹித், கோலி, ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் என இந்திய அணியின் டாப் 4 வீரர்கள் நல்ல ஃபார்மில் இருக்கையில், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், ஷிவம் துபே என வாய்ப்பு கிடைக்கும் வீரர்கள் மிடில் ஆர்டரில் அதிரடி காட்டினால் இந்திய அணியை யாராலும் நெருங்க முடியாது என்று தான் தெரிகிறது. இதனிடையே, சாஹல் இந்திய அணியில் தேர்வானது பற்றி பல விதமான கருத்துக்கள் பரவலாக இருந்து தான் வருகிறது.

சமீபத்தில் சில ஆண்டுகளாகவே நல்லதொரு ஆட்டத்தை தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்தி வந்த சாஹலுக்கு உலக கோப்பை உள்ளிட்ட சில முக்கியமான தொடர்களில் தொடர்ந்து வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டு தான் வந்தது. ஆனாலும் இதை எல்லாம் நினைத்து துவண்டு போகாமல், தொடர்ந்து தனது திறனை வெளிக்காட்டிய சாஹலுக்கு தற்போது சூப்பரான வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால், அதே வேளையில் உலக கோப்பை அணியில் இடம்கிடைத்த பின் ராஜஸ்தான் அணிக்காக தான் ஆடிய அடுத்த போட்டியிலேயே, 62 ரன்கள் கொடுத்து மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகி இருந்தார் சாஹல். சமீபத்தில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 48 ரன்கள் கொடுக்க, உலக கோப்பையில் இப்படி பந்து வீசினால் என்ன செய்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால், அதே வேளையில் உலக கோப்பையில் சர்வதேச அணிகளுக்கு எதிராக நிச்சயம் தனது தவறுகளை திருத்திக் கொண்டு பட்டையைக் கிளப்புவார் என்றே தெரிகிறது. அப்படி இருக்கையில் தான் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் விக்கெட்டை எடுத்ததன் மூலம் அசத்தலான சாதனையை படைத்துள்ளார் சாஹல்.

ஏற்கனவே ஐபிஎல் போட்டியில் 200 விக்கெட்டுகளை எடுத்த முதல் பந்து வீச்சாளர் என்ற சிறப்பை பெற்றிருந்த சாஹல், தற்போது 350 விக்கெட்டுகளை டி 20 போட்டிகளில் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். இப்படி ஒரு அசாத்திய வீரராக இருந்தும் அவருக்கான வாய்ப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தது தான் பலர் மத்தியில் கேள்வியை எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...