மத்த 9 கேப்டன்கள் செஞ்சும்.. ஹர்திக் பாண்டியாவால் முடியாத விஷயம்.. இதென்ன மும்பை கேப்டனுக்கு வந்த சோதனை..

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி அந்த அணியை சுற்றி விமர்சனங்கள் உருவானது இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டே தான் இருந்து வருகிறது. கடைசியாக, 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருந்த மும்பை அணி, தொடர்ச்சியாக நான்காவது முறையாக அதற்கான வாய்ப்பையும் தவற விட்டுள்ளது.

கடந்த 3 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா சிறப்பாக வழிநடத்தி வந்தாலும் சில தவறுகளால் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பையும் அவர்கள் இழந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த சீசனுக்கு முன்பாக மும்பை அணியில் மீண்டும் ஹர்திக் பாண்டியா இணைய, அணியில் அவரை சேர்த்ததுடன் மட்டும் இல்லாமல், ரோஹித்தை மாற்றி விட்டு புதிய கேப்டனாகவும் மும்பை நிர்வாகம் நியமித்தது.

ரோஹித் என்ற சிறந்த கேப்டனை பெரும்பாலான ஐபிஎல் அணிகள் கண்டிராது என்ற சூழலில் அவரை மாற்றி விட்டு ஹர்திக்கை கேப்டனாக அறிவித்த துணிச்சல், ஒரு பக்கம் பாராட்டுக்களை பெற்றாலும் மறுபக்கம் கடும் விமர்சனத்தை சந்தித்திருந்தது. இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ஒருவர், ஐபிஎல் தொடரில் சக வீரரின் தலைமையில் ஆடுவதே தவறு என்ற தொனியில் ரசிகர்கள் தங்கள் விமர்சன கருத்துக்களையும் முன் வைத்து வந்தனர்.

இதற்கிடையில், ஹர்திக் பாண்டியா மைதானத்திற்குள் வரும் போதெல்லாம் ரோஹித் பெயரை கத்தி அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஆரம்பத்தில் நிறைய லீக் போட்டிகளில் அந்த பழக்கம் தான் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அடுத்தடுத்த போட்டிகளில் இவை குறைந்து கொண்டே இருந்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்குள்ளேயே பிளவுகள் இருப்பதாகவும், வீரர்கள் சிலர் அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியான சமயத்தில் தான் தொடர்ந்து போட்டிகளை இழந்து பிளே ஆப் வாய்ப்பையும் மும்பை அணி இழந்தது.

பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாற்றம் கண்டு வந்த ஹர்திக் பாண்டியா, கடைசியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய சில போட்டிகளில் நன்றாக பந்து வீசி நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். மும்பைக்கு இன்னும் ஒரு போட்டியே மீதம் இருப்பதால் அதில் லக்னோ அணியை எதிர்த்து ஆடும் அவர்கள், வெற்றியுடன் இந்த சீசனை முடிக்க முயல்வார்கள் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில், ஒரு அணியின் கேப்டனாக ஒரு முக்கியமான பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா. ருத்துராஜ், சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் என அனைத்து ஐபிஎல் அணிகளின் கேப்டன்களும் இந்த சீசனில் 50 ரன்களுக்கு மேல் அடித்து விட்டனர். அப்படி அரை சதம் அடிக்காமல் ஹர்திக் மற்றும் சாம் கரண் மட்டுமே இருந்து வந்தனர். அப்படி ஒரு சூழலில் தான் ராஜஸ்தானுக்கு எதிராக 50 ரன்களை கடந்திருந்தார் சாம் கரண்.

இதனால், மற்ற 9 கேப்டன்களும் 50 ரன்களை கடக்க, ஹர்திக் பாண்டியாவின் 46 ரன்கள் தான் அவரது அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...