பொழுதுபோக்கு

பிரிட்டன் தேர்தலில் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி.. தமிழ் பெண் எம்பியாக தேர்வு..!

பிரிட்டனில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்த நிலையில் அதில் ஆளும் கட்சியான ரிஷி சுனக்  கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ளது. எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் அந்த கட்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த தேர்தலில் இந்தியர்கள் அதிக அளவில் போட்டியிட்ட நிலையில் தொழிலாளர் கட்சி சார்பில் உமா குமரன் என்பவர் லண்டன் ஸ்ட்ராட்ஃபோர்டு என்ற தொகுதியில் போட்டியிட்டார். இவர் 19,145 வாக்குகளை பெற்றார் என்பதும் இவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் வெறும் 3144 வாக்குகள் மட்டுமே பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஈழத் தமிழ் பெண் உமா குமரன் பிரிட்டன் பாராளுமன்றத்தில் எம்பியாகியுள்ளார். இவரது குடும்பம் இலங்கையில் நடைபெற்ற போரின் போது இங்கிலாந்துக்கு குடிப்பெயர்ந்ததாகவும் லண்டனில் பிறந்து வாழ்ந்த இவர் அங்கேயே அரசியல் இளங்கலை பட்டம் பெற்ற நிலையில் பல்வேறு துறையில் பணியாற்றியுள்ளார்.

அதன் பிறகு தொழிலாளர் கட்சியில் சேர்ந்த இவர் நாடாளுமன்ற விவகார ஆராய்ச்சியாளராகவும் வழக்கறிஞராகவும் இருந்த நிலையில் தான் 2017 முதல் 2020 வரை லண்டன் மேயரின் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றினார். மேலும் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துணை இயக்குனர் என்ற பதவியில் உமா குமரன் இருந்த நிலையில் தற்போது அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி ஆகியுள்ளார்.

இந்த நிலையில் பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சியை 407 தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்பதாகவும் பெரும்பான்மை பெறுவதற்கு 326 தொகுதிகள் போதும் என்ற நிலையில் அதைவிட அதிகமாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும் என்று ஏற்கனவே கருத்து கணிப்புகள் கூறியிருந்த நிலையில் அந்த கருத்துக்கணிப்புகள் தற்போது உண்மையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கட்சி 112 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

Published by
Bala S

Recent Posts