அவ்வை சண்முகியை ஜொள்ளு விடும் கதாபாத்திரம்.. சிவாஜி நடிக்க இருந்த ரோல்.. ஒரே ஒரு காரணத்தால் நடந்த ட்விஸ்ட்..

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கமர்சியல் இயக்குனர்களில் ஒருவர் தான் கே.எஸ். ரவிக்குமார். புரியாத புதிர் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கே.எஸ். ரவிக்குமார், கடைசியாக ரூலர் என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இது தவிர நிறைய திரைப்படங்களையும் தயாரித்துள்ள கே.எஸ். ரவிக்குமார் சமீபகாலமாக தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் குணசத்திர கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார். முன்னதாக தான் இயக்கும் அனைத்து திரைப்படங்களிலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் எங்காவது ஒரு இடத்தில் தலைகாட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்த கே.எஸ். ரவிக்குமார், தற்போது வில்லன் மற்றும் காமெடி கலந்த கதாபாத்திரங்களை கூட தேர்வு செய்து மிக அற்புதமாக நடித்து வருகிறார்.

அது மட்டுமில்லாமல் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களையும் இயக்கிய ஒரு இயக்குனர் என்றால் நிச்சயம் நாம் கே.எஸ். ரவிக்குமாரை சொல்லலாம். இவரது இயக்கத்தில் ரஜினி நடித்த முத்து, படையப்பா உள்ளிட்ட திரைப்படங்களும், கமல் நடித்த அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம் உள்ளிட்ட திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

ஆக்சன், காமெடி, காதல் என அனைத்து விஷயங்களுமே மிகச்சரியான கலவையில் கே.எஸ். ரவிக்குமார் படத்தில் இருப்பதால் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் இவரின் திரைப்படத்தை கண்டு களித்தனர். மேலும் கமல், கே.எஸ். ரவிக்குமார் கூட்டணியில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் அவ்வை சண்முகி. இந்த திரைப்படத்தில் அவ்வை சண்முகி என்ற வயதான பெண் கதாபாத்திரத்தில் கமல் நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தார்.

அதே போல, கமல் ஆணாக இருந்தும் அவர் பெண் வேடம் போட்டிருக்கிறார் என தெரியாமல், அவர் மீது காதலில் விழும் கதாபாத்திரத்தில் ஜெமினி கணேசன் நடித்திருந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக ஒரு நேர்காணலில் பேசியிருந்த இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார், ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் முதலில் சிவாஜி கணேசன் நடிக்க இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இது பற்றி பேசிய அவர், “அவ்வை சண்முகி படத்தில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் முதலில் சிவாஜி கணேசனை நடிக்க வைக்க தான் விரும்பினோம். ஆனால் அவருக்கு இருதய பிரச்சனை இருந்ததாகவும், இதனால் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் அவரது மகன் ராம்குமார் என்னிடம் தெரிவித்தார். இதனை அறிந்ததும் உடனடியாக சிவாஜிக்கு தொடர்பு கொண்டு பேசிய கமல்ஹாசன் அவரின் உடல்நலம் பற்றி விசாரித்தார்.

அந்த சமயத்தில் பேசிய சிவாஜி கணேசன், ‘ஆமாம்பா உடல்நிலை சரியில்ல. வெளிநாட்டுக்கு போறேன்’ என்று கூறியதுடன், ‘பாக்குற எல்லாரையும் காதலிக்கிற ஒரு கதாபாத்திரம்னா ஜெமினி கணேசன் கரெக்டா இருப்பான்’ எனக்கூறினார். அதன் பின்னர் தான் அந்த கதாபாத்திரத்தில் ஜெமினி கணேசன் நடித்தார்” என கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.