செய்திகள்

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டூ சமையல் மாஸ்டர்.. கை பக்குவத்துக்காக உணவகத்தில் அள்ளும் கூட்டம்

கொச்சி: கேரளாவில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் ஓட்டல் ஒன்றை திறந்து, அதில் அவரே சமையல் செய்யும் மாஸ்டர் ஆகவும் வேலை செய்து வருகிறார். பல ஆண்டுகளாக ஐஏஏஸ் பணியில் இருந்த அவர் ஓய்வு பெற்ற பின்னர் சமையல் மாஸ்டராகவும், உணவ உரிமையாளராகவும் மாறி உள்ளார். இவரது கடைக்கு ஏராளமானோர் வருகிறார்கள்.

கடந்த 2023 ஆம் ஆண்டு வரை கேரள மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற அலி அஸ்கர் பாஷா என்பவர் கொச்சியில் மீ மீ என்ற பெயரில் கடல் உணவகத்தை தொடங்கி நடத்தி வருகிறார். கொச்சியின் வல்லார்பாடம் பகுதியில் 60 பேர் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய அளவிற்கு திறக்கப்பட்ட இந்த ஓட்டலில் பாரம்பரிய கேரள கடல் உணவுகள்தான் கிடைக்கும். இந்த ஓட்டலில் சமையல் மாஸ்டராக இருப்பது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அலி அஸ்கர் பாஷாதான்.

பாரம்பரிய கேரள பாணியில் கடல் உணவுகளை சமைக்கும இவரது கைப்பக்குவத்தை கேள்விப்பட்டு.. கேரளா முழுவதும் பிரபலம் ஆகி உள்ளார். இந்த உணவகம் திறக்கப்பட்ட நான்கு மாதங்களில் கொச்சின் உணவு பிரியர்களின் ஹாட் ஸ்பாட் ஆகியுள்ளது.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அலி அஸ்கர் பாஷா 2004ஆம் ஆண்டு ஐஏஎஸ் முடித்தவர். அதிகாரியாக வாழ்ந்து பல ஆண்டு பணி செய்தவர். சமையல் ஆர்வத்தைக் கையில் கரண்டி எடுக்க முடிவு செய்தார் . உணவகத்தை தொடங்கிய அவர், ஒரு முதலாளி போல இல்லாமல், சமையல் செய்து அசத்துகிறார்.

இதுபற்றி அஸ்கர் பாஷா கூறுகையில்,நான் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய காலங்களில் சமைப்பது என்பது எனது பெரிய ஆசையாக இருந்தது. சர்வீஸில் இருக்கும்போதே என் வீட்டில் நானே சமைத்து சக ஊழியர்களுக்கு அடிக்கடி பரிமாறுவேன்.. சீனியர் அதிகாரிகளே எனது சமையல் திறமையைப் பாராட்டிப் பேசினார்கள்.

கடந்த 2023 ஜூலையில் ஓய்வு பெறுவதற்கு முன்பு, நான் ஒரு ஓட்டலை தொடங்க முடிவு செய்திருந்தேன். லாபம் ஈட்டுவதற்காக இல்லாமல், மக்களுக்குத் தரமான உணவை ஒரு நியாயமான விலையில் வழங்க வேண்டும் என்று விரும்பினேன். அதுதான் எனது நோக்கம்” என்றார் பாஷா.

இவரது உணவகம் பெயர் “மீ மீ”. இந்த ஓட்டல் மதியம் 12.30 மணிக்கு திறக்கப்பட்டு 3 மணிக்கு மூடப்படுகிறது. “மீ மீ” என்ற பெயர் காரணம் என்னவென்றல். மீன்களைக் குறிக்கக் கேரளக் குழந்தைகள் பயன்படுத்தும் ஒரு பொதுவான மலையாள சொல் ஆகும்.

இங்கு உணவுகளில் கலர் பொடிகளை சேர்ப்பதில்லை. சுவையைக் கூட்டுவதற்காக எந்த வித ரசாயன கலப்படமும் செய்வதில்லையாம். பிரெஸ்ஸான் காய்கறிகளை வாங்கி வந்தும், கொச்சின் சந்தையில் மீன்கள் வாங்கி வந்தும். ஆலப்புழாவின் ஒனாட்டுக்கரா தேங்காய் உற்பத்தி மண்டிகளிலிருந்து வாங்கப்பட்ட சுத்தமான தேங்காய் எண்ணெய்யிலும் சமைக்கிறாராம் பாஷா. கேரளா மக்கள் பலர் இந்த உணவகத்திற்கு தேடிப்போகிறார்கள். ருசி சூப்பராக இருப்பதாக சொல்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

 

Published by
Keerthana

Recent Posts