விளையாட்டு

இந்தியா, பாகிஸ்தானால கூட முடியல.. தெம்பாய் திரிந்த ஆஸி.யின் முக்கிய கவுரவத்துக்கு வேட்டு வைத்த ஆப்கானிஸ்தான்..

தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பைத் தொடரில் மிக முக்கியமான போட்டியாக அமைந்திருந்தது ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றில் மோதி இருந்தது. இந்த இரு அணிகளும் மோதிய போட்டி முடிந்து இரண்டு நாட்கள் ஆனாலும் இன்னும் அதைப் பற்றிய பேச்சு இணையத்தில் பரவலாக தான் இருந்து வருகிறது.

குரூப் 1 ல் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுடன் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்திருந்தது. அப்படி ஒரு சூழலில் இந்த இரு அணிகளும் மோத ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 148 ரன்கள் சேர்த்திருந்தது. வார்னர், ஹெட், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் என பலம் வாய்ந்த பேட்டிங் வரிசை கொண்டு ஆஸ்திரேலியா அணி விளங்கி வருவதால் இந்த இலக்கை மிக எளிதாக எட்டி விடுவார்கள் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆப்கானிஸ்தான் அணியில் குல்பதீன் நயீப், நவீன் உல் ஹக் என அனைத்து பந்துவீச்சாளர்களும் அற்புதமாக பந்து வீச ஆஸ்திரேலிய அணியின் வெற்றி வாய்ப்பும் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிப் கொண்டிருந்தது. மேக்ஸ்வெல் தனியாளாக போராடி அரைச்சதம் எடுத்த போதிலும் அவர் அவுட்டான பின்னர் அந்த அணியில் யாராலும் நிலைத்து நிற்க முடியவில்லை.

அதிரடி பந்துவீச்சு நிறைந்த ஆப்கானிஸ்தான அணியை எதிர்த்து ஆஸ்திரேலிய அணியால் இலக்கை நெருங்க கூட முடியாததால் அவர்கள் 127 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தனர். ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக வீழ்த்தி சாதனை புரிந்த ஆப்கானிஸ்தான் அணி, கடந்தாண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் லீக் தொடரின் தோல்விக்கு தக்க பதிலடியை தற்போது கொடுத்துள்ளனர்.

மிகக் குறுகிய காலத்திலேயே நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை என டாப் அணிகளை ஐசிசி தொடரில் வீழ்த்தியுள்ள ஆப்கானிஸ்தான் அணி மிக முக்கியமான அணிகளில் ஒன்றாகவும் தற்போது மாறி உள்ளது.

இனிமேல் அடுத்தடுத்து வரும் ஐசிசி தொடர்களிலும் ஆப்கானிஸ்தான் ஆட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படும் என்று தெரியும் நிலையில், வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி சூப்பர் 8 போட்டியில் அவர்கள் வெற்றி பெற்றால் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கொஞ்சம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்படி ஒரு சூழலில் தான் ஆஸ்திரேலியா நீண்ட நாளாக தக்கவைத்து வந்த சாதனையை தவிடு பொடியாக்கி உள்ளது ஆப்கானிஸ்தான் அணி. ஐசிசி தொடரில் ஒரு நாள் உலகக் கோப்பை, டி20 உலக கோப்பை என அனைத்திலும் சேர்த்து தொடர்ச்சியாக 14 போட்டிகளில் வெற்றி பெற்று வந்தது ஆஸ்திரேலியா அணி.

அவர்களின் இந்த வெற்றி பயணத்திற்கு பாகிஸ்தான், இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட அணிகளால் கூட முட்டுக்கட்டை போட முடியாமல் இருந்தது. அப்படி ஒரு நிலையில் தான் தொடர்ச்சியாக 14 போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவின் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. கத்துக்குட்டி அணியாக இருந்து தற்போது ஆஸ்திரேலியா போன்ற அசுர அணியின் வெற்றியை தடுத்து நிறுத்திய ஆப்கானிஸ்தானை பலரும் வியந்து தான் பார்த்து வருகின்றனர்.

Published by
Ajith V

Recent Posts