ரசிகர்களின் பல்ஸ் பிடித்த சூப்பர் ஸ்டார்.. ஸ்டைல் மழை பொழிந்த இளமை ஊஞ்சலாடுகிறது..

பொதுவாகவே ரஜினிக்கு என்று ஓர் சிறப்பு உண்டு. இதுவரை சினிமாவில் எத்தனையோ விருதுகள் பெற்றிருந்தாலும் இன்னும் அவருக்கு சிறந்த நடிப்பிற்கான தேசிய விருது அலங்கரிக்கவில்லை. ஆனால் இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதையே பெற்றிருப்பினும் தேசிய விருது என்பது அவருக்கு ஓர் குறையாகவே இருக்கிறது. ஆனால் அவரின் சமகால ஹீரோவான கமல் பலமுறை தேசிய விருதினை முத்தமிட்டிருக்கிறார்.

இவர்கள் இருவரும் இணைந்து 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கின்றனர். கமல் நடிப்பில் கிங் என்றால், ஸ்டைலில் ரஜினிதான் சக்கரவர்த்தி. ரஜினி முடியைக் கோதி உயர்த்தினாலே அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்து அமர்க்களப்படுத்துவார்கள். இருப்பினும் ரஜினிக்கு முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை, ஆறிலிருந்து அறுபது வரை, தில்லுமுல்லு போன்ற நடிப்புக்குச் சவால் விடும் படங்களும் அமைந்தது. இவ்வாறு ரஜினியின் ஸ்டைலுக்காகவே 100 நாட்களைக் கடந்து ஓடிய ஒரு திரைப்படம் தான் இளமை ஊஞ்சலாடுகிறது.

தமிழ் சினிமாவின் புதுமை இயக்குநர் என்று போற்றப்படும் இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் 1978-ல் இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படம் வெளியானது. கமல்ஹாசன், ரஜினி, ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா ஆகியோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படத்தில் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின். குறிப்பாக தண்ணி கருத்திருச்சு.. என்னடி மீனாட்சி.. ஒரே நாள் உனை நான்.. கிண்ணத்தில் தேன் வடித்து..போன்ற பாடல்கள் ரஜினிக்கும், கமலுக்கும் பெரும்புகழ் சேர்த்தது.

இந்தப் படத்தில் இயக்குநர் ஸ்ரீதர் ரஜினியை வேலை வாங்கியதே ஒரு தனிக்கதை. கதைப்படி டெலிபோன் மணி அடிக்கும். அப்போது மாடிப்படி ஏறும் ரஜினிகாந்த் ரிவர்ஸில் இறங்கி வந்து அதை எடுத்து பேச வேண்டும். நான்கு படி ஏறினால் போதும். இயக்குநர் சொல்ல ரஜினி அந்தக் காட்சியில் டெலிபோன் மணி ஒலிக்க மளமளவென 7 படிக்கட்டுகளில் ஏறி ரிவர்ஸில் வந்து எடுத்திருக்கிறார். ஸ்ரீ தர் இப்படி வேண்டாம் என்று கூற இல்லை சார் எனது ரசிகர்களுக்கு இப்படித்தான் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.

மூஞ்சி முகரையைப் பாரு.. விட்டா வேட்டிக்குள்ள.. எதிர்நீச்சல் மாரிமுத்துவை பிரபலப்படுத்திய அந்த ஒரு சீன்..

அடுத்ததாக ஒரு காட்சி. ஃபைலில் கையெழுத்திட வேண்டும். இதற்காக ஒரு சிறிய பேனா கொடுக்க அந்தக் காட்சி வந்தது. ஆனால் ரஜினி அப்போது அவர்கள் கொடுத்த பேனாவை பயன்படுத்தாமல் பெரிய பேனாவை சிறியதாக்கி மடக்கி வைத்து திடீரென அதை எடுத்து பெரிதாக்கி ஸ்டைலாக கையெழுத்திடுவார். இயக்குநர் ஸ்ரீதருக்கு ஒன்றும் புரியவில்லை.

சரி என ஓகே சொல்லிவிட்டு படத்தினை முடித்துவிட்டு ரிலீஸ் நாளில் தியேட்டரில் சென்று பார்க்க ஸ்ரீதருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. ரஜினி எங்கெங்கு ரசிகன் கைதட்டுவான் என்பதைப் புரிந்து அந்தக் காட்சிகளில் இயக்குநர் பேச்சை மீறி ஸ்டைலை புகுத்தி நடித்தாரோ அந்தக் காட்சி எல்லாம் கைதட்டல் பெற அப்போதுதான் இயக்குநர் ஸ்ரீதருக்கு புரிந்தது. ஒரு நடிகன் தனது ரசிகனின் பல்ஸ்-ஐ அறிந்து அதற்கேற்றாற் போல் தன்னுடைய நடிப்பில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை நடிப்பில் புகுத்தி அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் என்பது. இதுதான் ரஜினி உச்ச நடிகராக வளர்ந்த ரகசியம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews