செய்திகள்

சென்னை அடையாறில் தீப்பிடித்து எரிந்த புத்தம் புதிய அரசு சிஎன்ஜி பேருந்து.. பயணிகள் கலக்கம்

சென்னை: சென்னை அடையாறு எல்பி சாலையில் சென்று கொண்டிருந்த சென்னை மாநகரப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பேருந்து சமீபத்தில் தான் வாங்கப்பட்டு சிஎன்ஜி பேருந்தாக கட்டமைக்கப்பட்டிருந்தது.புத்தம் புதிய பேருந்து தீப்பற்றி எரிந்தது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடையாறில் இருந்து திருவான்மியூர் செல்லும் சாலையான எல்பி சாலையில் பாரிமுனை டூ சிறுசேரி செல்லக்கூடிய புத்தம் புதிய சிஎன்ஜி அரசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. அடையாறு பேருந்து நிலையம் அருகே பேருந்து சென்ற போது திடீரென தீப்பிடித்தது. உடனடியாக பேருந்தில் இருந்து பயணிகள் இறங்கினார்கள்.

பாரிமுனை டூ சிறுசேரி செல்லக்கூடிய இந்த சிஎன்ஜி பேருந்தில் கேஸ் நிரப்பட்டு இருந்தது. அடையாறு பேருந்து நிலையம் அருகே வரும் போது கியர் பாக்ஸ் அருகில் புகை வந்துள்ளது. இதை டிரைவரும் கண்டக்டரும் நல்வாய்ப்பாக கண்டறிந்துள்ளனர். உடனே அதில் வந்த பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டனர்.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அவர்களை இறக்கிவிட்டு சென்றது. தொடர்ந்து புகை வந்ததன் காரணமாக தீ பிடிக்க ஆரம்பித்தது. இதையடுத்து நடத்துனரும், ஓட்டுநரும் நிறுத்திவிட்டு, பாதுகாப்பாக இறங்கிவிட்டார்கள். அதன்பிறகு பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது. நடுரோட்டில் பேருந்து தீ பிடித்து எரியும் தகவல் தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு துறையினர் வருவதற்குள்ளாகவே பேருந்து முழுமையாக எரிந்தது அந்த பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சாலையில் யாரும் போகாத வண்ணம் சாலை முழுமையாக அடைக்கப்பட்டது. சிஎன்ஜி கேஸ் நிரப்பப்பட்ட பேருந்து என்பதால் அசம்பாவிதத்தை தவிர்க்க தீயணைப்பு துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர்.இந்த பேருந்து சமீபத்தில் தான் வாங்கப்பட்டு சிஎன்ஜி பேருந்தாக கட்டமைக்கப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Published by
Keerthana

Recent Posts