உலகம்

வயசு எல்லாம் ஒரு மேட்டரா.. 81 வயதில் மூதாட்டி செஞ்ச சாதனை.. இன்னைக்கு உலகமே திரும்பி பாக்குது..

இன்றைய காலகட்டத்தில் எல்லாம் ஒருவர் 30 வயதை எட்டிவிட்டாலே அவர்களின் உடல், கை, கால் எல்லாம் வலி எடுக்க ஆரம்பிப்பதுடன் மட்டுமில்லாமல் ஏதோ வயதானவர்களைப் போலவும் ஒரு உணர்வு வந்து விடுகிறது. அந்த காலத்தில் எல்லாம் பலரும் 90 முதல் 100 வயதுக்கு மேற்பட்டு வாழ்ந்து வந்த சூழலில் அந்த வயது வரை உடலில் எந்த குழப்பங்களும் இல்லாமல் கடினமாக உழைத்தும் வந்தனர்.

இன்றைய காலத்தில் இளைஞர்களுக்கு மிகவும் உத்வேகமாக இருக்கும் இது போன்ற பழைய பல முதியவர்கள் மத்தியில் தான் தற்போது ஒரு மூதாட்டியும் முக்கியமான சாதனையை செய்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

அமெரிக்காவின் போஸ்டான் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் தான் மூதாட்டி ஹெலன் அண்டுனெச்சி. இவருக்கு தற்போது 81 வயதாகும் நிலையில் ரயில் ஓட்டுநராக பணிபுரிந்து வருவது தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. மசாச்சுசெட்ஸ் என்னும் பகுதியில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் அதாவது தனது 53 வது வயதில் ரயில் ஓட்டுநர் பணியை தொடங்கி இருந்தார் ஹெலன். ஒரே ரயில் பாதையில் கடந்த 29 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஹெலன், இதனால் உலகிலேயே மிகவும் வயதான ரயில் ஓட்டுனர் என்ற கின்னஸ் சாதனையையும் தற்போது படைத்துள்ளார்.

இன்று வரை கொஞ்சம் கூட அயராது உழைத்து வரும் ஹெலன் இது பற்றி பேசுகையில், இந்த வேலை காரணமாக 81 வயதிலும் தன்னால் வீட்டிலிருந்து வெளியே வரவும் தனது நேரத்தை நிம்மதியாக செலவிட முடிவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பணியில் மற்றொரு சிறப்பம்சமாக இத்தனை ஆண்டுகளில் குறைவான பெண்கள் இந்த பணியில் இருந்த போதிலும் எந்தவித பாகுபாட்டையும் ஹெலன் சந்திக்கவில்லை என்பதுதான் முக்கியமாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் ஒரு சில பெண்களோடு ஹெலன் பணிபுரிந்து வர, தற்போது அங்கே 40 சதவீதம் வரை பெண்கள் இந்த பணியில் இருந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் ஹெலன் தனது வேலை குறித்தும், ஓய்வு எப்போது என்பது பற்றிய கேள்விக்கு தெரிவித்த மற்றொரு கருத்தும் அனைவரையும் ஒரு நிமிடம் அசரத்தான் வைத்துள்ளது.

தான் தினமும் வேலைக்கு வருவதையும் பயணிகளை சந்திப்பதையும் விரும்புவதாக தெரிவித்துள்ள ஹெலன், ஓய்வு பெறுவது குறித்து எதுவும் யோசிக்கவில்லை என்றும், இங்கு வரும் பயணிகளை பத்திரமாக ஒரு இடத்திற்கு கொண்டு சேர்ப்பது பிடித்திருப்பதாகவும் பணி மீது அந்த அளவுக்கு அக்கறையுடன் பேசியுள்ளார்.

சிலர் எல்லாம் 60 வயதில் ஓய்வு கிடைத்தால் போதும் என பணிபுரிந்து வர, 81 வயதிலும் இளமையாக ஓடி பணிபுரிந்து வரும் ஹெலன் பலருக்கும் நிச்சியம் இன்ஸபிரேஷன் தான்.

Published by
Ajith V

Recent Posts