மீண்டும் 96 போன்ற வெற்றி..? VJS – 50 மகாராஜா திரைப்படம் எப்படி இருக்கு?

ஒரே ஒரு லட்சுமி.. ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்கிறது என்பதை பரபரப்பு திருப்பங்களுடனும், நான் லீனியர் கதை சொல்லும் யுக்தியையும் கையாண்டு மகாராஜா என்னும் ஒரு படைப்பைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் நிதிலன் சாமிநாதன். கடந்த 7 வருடத்திற்கு முன் குரங்கு பொம்மை என்ற திரைப்படத்தினை இயக்கியவர் மீண்டும் ஒரு தரமான கதைக் களத்துடன் தமிழ் சினிமாவில் கச்சிதமாகக் காலூன்றி இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக விஜய் சேதுபதியும், அனுராக் காஷ்யப் ஆகியோரும் பக்க பலமாக படத்தினைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். தென்மேற்குப் பருவக் காற்றில் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதிக்கு இது 50-வது படம் என்ற சிறப்புடன் Passion Studios & The Route தயாரிப்பில் மகாராஜாவாக வெளிவந்திருக்கிறது.

ஒரு சவரக்கத்தி முதல் உயிரற்ற பொருட்கள் தொலைந்து போனால் நம் வாழ்வில் அவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கின்றன என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறார் இயக்குநர் நித்திலன் சாமிநாதன். விஜய் சேதுபதி மகாராஜாவாக கன கச்சிதமாகப் பொருந்துகிறார். நரைத்த முடியும், காதில் கட்டுடனும் அவரது தோற்றம் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. 300 ரூபாய் கூட பெறாத ஒரு பொருளுக்கு 5லட்சம் லஞ்சம் தருகிறேன் என்று கூறும் போதிலிருந்து தொடங்குகிறது படம். முதல் பாதியில் காமெடி, கலாட்டா எனச் சென்ற படம் இரண்டாம் பாதியில் அடேங்கப்பா என சபாஷ் போட வைக்கிறது.

அனுராக் காஷ்யப்.. மனுஷன் எப்படி நடிக்கிறாரு.. இமைக்கா நொடிகள் படத்தில் ஹைனா கதை சொல்லியே அதிர வைத்தவர் இந்தப் படத்தில் வில்லனாக அசர வைக்கிறார். முதல் படத்திலும் விஜய் சேதுபதி, இந்தப் படத்திலும் விஜய் சேதுபதி என இயல்பாகவே அவர்களுக்குள் ஓர் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அனுராக் டப்பிங்கில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

கும்கி படத்தால் மரியாதை இழந்து நடிகனான அப்பா நடிகர்.. கவிஞர் ஜோ மல்லூரிக்கு வந்த சோதனை

இதற்கு முன்னர் வந்த படங்களில் காமெடியனாகப் பார்த்துக் கொண்டிருந்த சிங்கம்புலியை சைக்கோ படத்தில் குணச்சித்திர நடிகராகப் பார்த்தோம். ஆனால் தற்போது மகாராஜா படத்தில் அவரது கதாபாத்திரம் அடுத்த எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா வரிசையில் கலக்குவார் என எதிர்பார்க்கும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

படத்திற்கு இசை அஜனீஷ், ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன், எடிட்டிங் பிலோமின் ராஜ் என அனைவரும் தங்களது வேலையை கச்சிதமாகச் செய்திருக்கின்றனர். பொதுவாக டாப் நடிகர்களுக்கு 50-வது படம், 25-வது படம் ஆகியவை பெரிய வெற்றியைக் கொடுத்ததில்லை. ஆனால் விஜய் சேதுபதிக்கு இந்தப் படம் 96 படத்தின் வெற்றியைப் போல அடுத்த தரமான வெற்றியைக் கொடுக்கும் என மகாராஜாவை எதிர்பார்க்கலாம்.

விஜய் சேதுபதியுடன் காவல் அதிகாரியாக நட்ராஜ் (நட்டி), அபிராமி, முனீஸ் காந்த், மம்தா மோகன்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...